தலவாக்கலை லிந்துலை நகரசபையிலே தன்னுடைய அரசியலை ஆரம்பித்து இலங்கை சோசலிஸ குடியரசின் மிகப் பெரிய அமைச்சராக விளங்கியவரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களுக்கு தலவாக்கலை நகரத்திற்குள்ளே ஒரு சிலை அமைக்க வேண்டும் என தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உறுப்பினரான தாளமுத்து சுதாகரன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் முதல் அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்
எனது தந்தை 35 வருட காலமாக தலவாக்கலை பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அரசியல் செய்திருந்தாலும் அவரால் ஒரு மக்கள் பிரதிநிதியாக முடியவில்லை காரணம் அவரின் நேர்மை. அவரின் நேர்மையின் காரணமாக எந்த தலைவரும் அவரை வளர விடவில்லை. அதே பிரச்சினையை எதிர் கொண்டவன் நான் இருந்தும் கூட இங்கே உரையாற்றிய பலர் மிகப் பெரிய தலைவர்கள்,அமைச்சர்கள் பெயரை உச்சரித்தார்கள் ஆனால் அப்பெயர்களை உச்சரிக்கும் பலன் எனக்கு கிடைக்க வில்லை. நான் தனியாக நின்று மக்கள் துணையோடு வெற்றி பெற்றுள்ளேன்.தலவாக்கலை தோட்ட மக்கள் எனக்கு வழங்கிய மிகப் பெரிய அங்கீகாரம் இது. தலவாக்கலை தோட்ட முகவரியை கொண்டு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு பிரவேசித்த முதலாவது நகரசபை உறுப்பினராக நான் இருப்பதையிட்டு பெருமை அடைகின்றேன்.என்னிடத்தில் அரசியல் சிந்தனையை ஊட்டிய மலையக மாற்றத்திற்கு வித்திட்டவரும் மலையக மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிந்த வீரத் தலைவன் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த இடத்திலே எனது வெற்றியை சமர்ப்பணம் செய்கின்றேன். இவ்வாறான ஒரு மிகப் பெரிய தலைவனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தல்ல. இன,மத பேதமின்றி தலவாக்கலை லிந்துலை நகரசபையிலே தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த அமரர் பெரியசாமி சந்திரசேகரன் என்ற ஒரு கௌரவ தலைவர் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்;க்கின்றேன். இந்த மரியாதை எதிர்காலத்தில் தலவாக்கலை லிந்துலை நகரசபையிலே இருந்து செல்ல கூடிய ஒவ்வொரு தலைவனுக்கும் கிடைக்க கூடியதாக இருக்கும். ஆகவே இதற்கு நகர சபையின் தலைவர் அசோக சேபால உட்பட அனைத்து உறுப்பினர்களும் நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.