கொழும்பு மா நகர சபை ஏற்பாடு செய்துள்ள வெசாக் வார நிகழ்வுகள், இம்முறை சகல சமயங்களையும் உள்ளடக்கப்பட்ட நிலையில், இன்று (25) முதல் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வரை, கொழும்பு மா நகர முதல்வர் ரோஸி சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில், மா நகர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று (25) முதல் 28 ஆம் திகதி வரை பல்வேறு மத நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், 29 ஆம் திகதி முதல் மே மாதம் முதலாம் திகதி வரை, மா நகர சபையின் திணைக்களங்களுக்கு இடையிலான வெசாக் பந்தல் (கூடு) கண்காட்சிப் போட்டிகள், மா நகர சபை வளாகத்திற்கு அருகிலுள்ள டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 29 ஆம், 30 ஆம் திகதிகளில் இரவு 7.30 மணி முதல் மா நகர சபை வளாகத்தில் மா நகர சபையின் பக்தி கீதம், பாடசாலை பக்தி கீதம், கட்புல மற்றும் அரங்கேற்றக்கலை பல்கலைக் கழகத்தின் பக்தி கீதம், சமயப் பாடசாலைகளுக்கு இடையிலான பக்தி கீதம், நூர்த்தி கீதம் ஆகிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. இது தவிர, மே மாதம் முதலாம் திகதி இரவு மா நகர சபை வளாகத்தில் "சித்தார்த்த கெளதம" திரைப்படம் காண்பிக்கப்படவிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.