இப்போதுள்ள காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தாலும், ஏனைய மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகளவான எம்சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருகின்றார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு விளையாட்டுக் கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2018.04.15ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தனது உரையில் நடைபெறுகின்ற சமூக விரோதச் செயல்களை எடுத்து நோக்கினால் அதிகமாக முஸ்லிம் பெயர் தாங்கிய நபர்களே காணப்படுகின்றனர். நம்மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் சமூக விரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்காக நடைபெறுகின்ற கலந்துரையாடல்களில் நாங்கள் கலந்துகொள்ளுகின்றபோது அரச புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்து நோக்கினால் எமது மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
வளர்ந்து வருகின்ற எம்இளைஞர் சமூகம் கல்வி மற்றும் மார்க்கம் சார்ந்த இரு விடயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது. விளையாட்டுக் கழகங்கள் தங்களை விளையாட்டுத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஏனைய நம்சமூகம் சார்ந்த விடயங்களிலும் இளைஞர்களை அதிகம் வளப்படுத்த வேண்டியதொரு தேவைப்பாடு உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு இருக்கின்றது.
அத்துடன், இளைஞர்களுக்கு மத்தியில் மாதத்தில் ஒருநாள் வதிவிட பயிற்சிகளை மேற்கொண்டு அதில் எம்சமூகம் சார்ந்த விடயங்கள், சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர முடியும் தொடர்பாக ஆராய்வது எங்களால் எவ்வாறான பங்களிப்புக்களை எம்சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்ய முடியும் என்பதனையும் ஆராய்ந்து அச்செயற்பாடுகளை செயற்படுத்தி பார்க்க வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி, கல்குடாத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திபாஸ் மற்றும் யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.