அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர் செயலாளர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று (22) மருதமுனை மசூர் மௌலானா மைதான கேட்போர் கூடத்தில் பேரவையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து
எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதியாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி மற்றும் விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், பேரவையின் உதவிச் செயலாளர் எம்.ஐ. உதுமாலெப்பை, மேலதிக மாவட்ட பதிவாளர் ஜமால் முஹம்மது மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மருதமுனை வை.எம்.எம்.ஏ. தலைவருமான றஹ்மான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் அம்பாரை மாவட்டத்தின் 13 கிளை வை.எம்.எம்.ஏ. களின் தலைவர்,
செயலாளர்கள் கலந்து கொண்டதுடன், இங்கு இம்முறை பேரவையின் தேசிய வேலைத்திட்டங்களை அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு செயற்திட்டஙகள் முன்வைக்கப்பட்டன. அதனை எல்லா கிளைகளின் பங்களிப்புடன்
விரைவில் அம்பாரை மாவட்டமெங்கும் செயற்படுத்துவதென்றும் முடிவுகள்
எட்டப்பட்டன.
இங்கு அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களை உள்ளடக்கியதான மரநடுகை செயற்திட்டம், பிரதேச பள்ளிவாயில்களில் கடமையாற்றும்
முஅத்தின்மார்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு, போதைப்பொருள் குறைப்பு செயலமர்வு, வீதிப்போக்குவரத்து செயலமர்வு, மரணித்த மூவினங்களையும் அடக்கம் செய்யும் மையவாடி தெரிவுசெய்யப்பட்டு அங்கு மூவின மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் மேற்கொள்ளல், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. இன் பங்களிப்புடன் சாய்ந்தமருது பிரதேசமெங்கும் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் போன்ற பல வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பேரவையின் நீண்டகால வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து தேசியத் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தொழிலதிபர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களின் முயற்சியினால் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.