கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களை இலங்கை ஆசிரியர்சேவைக்குள் நிரந்தரமாக உள்ளீர்ப்புச்செய்வதற்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சில் (21) சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
நீண்டகாலமாக தொண்டராசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவதற்கான இத்தகைய நேர்முகப்பரீட்சை நடாத்தப்படவில்லை. சுமார் 15வருடங்களுக்குப்பிறகு இச்செயற்பாடு நடைபெறுவதால் பலரும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
2007 ஆம் ஆண்டிற்கு முன் 3வருடங்கள் பாடசாலைகளில் தொண்டராக பணியாற்றிய சுமார் 1500க்கு மேற்பட்டவர்கள் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்வியமைச்சின் பணிமனையில் 3 கருமபீடங்களில் இந்நேர்முகப்பரீட்சை நடைபெற்றுவருகின்றது. கிழக்கின் பல பாகங்களிலுமிருந்தும் தொண்டராசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய 3மாவட்டங்களிலுமிருந்து தமிழ்சிங்கள முஸ்லிம் தொண்டராசிரியர்கள் இந்நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க்ப்பட்டுள்ளனர்.
தினமொன்றுக்கு 100தொண்டராசிரியர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுவருகின்றனர். எண்ணிக்கை அதிகமென்பதால் இப்பரீட்சை தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீண்டகாலத்திற்குப்பிறகு இந்நேர்முகப்பரீட்சை நடைபெறுவதால் நீண்டகாலம் பணியாற்றிய 45வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் தோற்றிவருகின்றனர். 50வயது 55வயதுரையுள்ளவர்களும் தோற்றிவருகின்றார்கள்.
அவர்களுக்கான நியமனம் எவ்வாறமையும் என்பது தெளிவாகத்தெரியவில்லை. எனினும் நேர்முகப்பரீட்சையை நடாத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆதலால் நடாத்துகின்றோம் தெரிவு தொடர்பாக பின்னர் அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.