அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்முனை மாகரசபையினை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் முன்கொண்டுசெல்ல திடசங்கற்பம் கொண்டுள்ளதாக ஆறாவது முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி அபூபக்கர் முஹம்மட் ரக்கீப் தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கல்முனை மாநகரசபையின் இரண்டாவது அமர்வு 2018-04-26 முதல்வர் ரக்கீப் தலைமையில் காலை 11.00 மணிக்கு சபா மண்டபத்தில் ஆரம்பமானது இங்கு சபை நிகழவுகளை ஆரம்பித்து உரையாற்றியபோதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
41 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையின் நிகழ்வுகள் மிகுந்த இட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பமானவுடனேயே ஆசனப்பகிர்வு விடயத்தில் சற்று அமைதியின்மை ஏற்பட்டபோது முதல்வர் உடனடியாக தலையிட்டு உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆசன ஒழுங்குகளை செய்து கொடுத்தார். இதன் அடிப்படையில் பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஷ் உள்ளிட்ட முதல்வருக்கு சார்பான ஒரு அணி ஒரு புறமாகவும் ஏனையவர்கள் அடுத்த புறமும் இருந்து சபை நடவடிக்கைகளில் பங்குகொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ரக்கீப்,
கல்முனை மாநகரத்தின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் அபிலாஷைகள் எதிர்பார்புக்களில் மாநகரசபையின் இயலுமைக்குள் முடியுமான அனைத்தையும் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இங்கு உறுப்பினர்கள் இன ஒற்றுமை தொடர்பிலும் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் தங்களது கன்னியுரைகளை நிகழ்த்தினர். இடையிடையே உறுப்பினர்களுக்கிடையே சொற்போரும் இடம்பெற்றது.