துருக்கி அரசாங்கத்திடம் முஸ்லிம் மீடியா போரம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி ஊடக செயலமர்வில் கலந்துகொள்வதற்கு 10 இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உதவி பொருளாளர் நுஸ்கி முக்தார் ஆகியோர் துருக்கி பயணமாகியுள்ளனர்.
முஸ்லிம் மீடியா போரத்தினால் துருக்கி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 10 இளம் ஊடகவியலாளர்களில் ஏனைய 8 பேரும், தலா 2 பேர் வீதம் அடுத்தடுத்து நடைபெறும் ஊடகத்துறை பயிற்சிநெறியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த துருக்கியின் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதி அர்துகானின் ஆலோசகருமான பேராசிரியர் தாவூத் டொக்லேவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி அரசாங்கம் மற்றும் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி முழுநேர இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
துருக்கி பிரதமரின் கீழ் இயங்கும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் Turkish Cooperation and Coordination Agency (TIKA) மற்றும் Anadolu Agency's News Academy ஆகிய நிறுவனங்களினால் ஏப்ரல் 30 தொடக்கம் மே 11 வரை இந்த பயிற்சிநெறி நடைபெறவுள்ளது.
இரு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி நெறியின் ஓர் அங்கமாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு, கலாசார அமைச்சு அரச மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.