எம்.ரீ. ஹைதர் அலி-
திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
நேற்று (28.04.2018) விஷேட ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றினூடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
அவரவர் கலாச்சாரத்திற்கு அமைவாக தமது உடைகளை அமைத்துக்கொள்வதற்கு இந்நாட்டில் பூரண அதிகாரமுள்ள போதிலும் மிகவும் ஒழுக்கமான முறையில் முஸ்லிம் ஆசிரியைகள் அணிந்துவரும் அபாயா போன்ற ஆடைகளுக்கு திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் தடை விதிக்கப்பட்டமையானது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். நாட்டிலுள்ள அரச பாடசாலையொன்றில் ஆசிரியர்களின் உடை தொடர்பாக தேவையற்ற இன ரீதியான கட்டுப்பாடுகளை திணிப்பதற்கு எவருக்கும் எத்தகைய அதிகாரங்களும் கிடையாது.
இந்நிலையில் இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றமாக அப்பாடசாலையில் கடமையாற்றக்கூடிய பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆகவே இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளும், அதற்கு ஆதரவளிக்கும் நிர்வாக நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும். இந்நாட்டின் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்து பயணிக்கவேண்டியதொரு தருணத்தில் ஒரு சில இனவாதிகளினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாகும்.
எனவே ஒழுக்கத்தினையும், சமூக ஒற்றுமையினையும் போதிக்கக்கூடிய அரச பாடசாலையொன்றில் மிகவும் மோசமான முறையில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை மேற்கொண்ட நபர்களை கண்டறிந்து அத்தகைய ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பாடசாலை நிருவாகிகள் ஆகியோர்களுக்கு குறைந்த பட்சம் ஒருவருட கால பணி நிறுத்தம் செய்யப்படுவதோடு, குறித்த ஒவ்வொரு நபர்களுக்கும் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இப்பிரச்சனையின் போது சம்மந்தப்பட்ட இனவாதிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அதிகாரிகளுக்கெதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, குறித்த பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளை மீண்டும் அப்பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இதுவிடயம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா. சம்மந்தன் மற்றும் தேசிய சகவாழ்வு அமைச்சர் கௌரவ மனோ கணேசன் போன்ற பொறுப்புவாய்ந்த தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பனூடாக நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதோடு இவ்வாறான செயற்பாடுகள் இனி எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்கள், மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக இனவாத கருத்துக்களை வெளியிடுவதனையும், ஏனையவர்களின் மத நம்பிக்கை ரீதியான விடயங்களை தேவையற்ற முறையில் விமர்சிப்பதனையும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரும் தவிர்ந்து இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மத்தியில் சிறந்ததொரு இன ஒற்றுமை மேலோங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.