வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்!!

 
      
என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும், உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டெழ நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.

இந்த ஆண்டு மே, யூன், யூலை மாதங்களில் சுமார் ஐம்பது வரையான ஆட்டங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ளன. சுமார் பன்னிரண்டு வரையான அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

உதைபந்தாட்டத்தில் முன்னேறி அதை பல கோடிகள் புரளும் பெரும் தொழிலாக மாற்றிய உலக நாடுகள் அதனால் அடைந்த நன்மைகள் பல.

இதுவரை அது நமக்கு கனவு.. இப்போதோ நனவு..!!

பந்தடி சோறு தருமா..? என்பது நமது மக்களிடையே கேட்கப்படும் புரி தேய்ந்து போன ஒரு மிகப் பழைய கேள்வியாகும். படிக்க வேண்டும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது இலட்சியச் சோறு நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் இன்னமும் நம்மிடையே மாறவில்லை.

இந்தக் குரல்களுக்குரிய இயலாத மனிதர்கள் குற்றவாளிகள் இல்லை. உதைபந்தாட்டத்தை பிறிமியர் லீக் ஆட்டநிலைக்கு கொண்டு வந்து அதை வர்த்தக நிலைக்கு மாற்றத் தவறியதும், அத்தகைய மாற்றத்தை வாழ்க்கை நீரோட்டத்தில் கலக்கத் தவறியதும் சமுதாயம் இழைத்த தவறாகவே பார்க்கப்பட வேண்டும்.

உருவாக்கியிருந்தால் சோறு போடுமா என்ற கேள்வி உருவாகியிருக்காதல்லவா...?
மற்றவர்களை குற்றம் சொல்ல முடியாது சமுதாயம் என்பது நாம்தான். நாமே அதை மேம்படுத்தும் பணிகளை முன்னின்று ஆரம்பிப்பதுதான் வெற்றிக்கான திறவு கோலாகும். இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பிறிமியர் லீக்கின் வரவானது, பழைய காலத்தைப் போல வரும் வரும் என்று காத்திராமல் துணிந்து முன்னெடுக்கப்பட்ட அரிய முயற்சியாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உதைபந்தாட்டமானது போருக்கு முன்னர் கணிசமான வளர்ச்சி பெற்று பல சிறந்த வீரர்களை உருவாக்கியிருந்ததை மறுக்க இயலாது.

அன்று அந்த ஆட்டங்கள் லீக் முறையை நெருங்கினாலும், அதை எட்டித் தொட முன்னரே போர் வெடித்துவிட்டது. சீன அணி வடக்குக் கிழக்கு வந்தபோது பிறிமியர் லீக் போன்ற ஓர் எத்தனம் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அது போதிய வளர்ச்சி பெறவில்லை.

போர் முடிவடைந்து சுமார் ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் முதற் தடவையாக பிறிமியர் லீக் ஆட்டம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஆரம்பிக்கிறது.

இதற்கான வளங்கள் நம்மிடம் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு தாராளமாக என்ற பதிலே இப்போது விடையாகக் கிடைத்துள்ளது.

இது வரை காலமும் ஊர்களின் அணிகளும், அந்தந்த ஊர்களில் உள்ள கழகங்களும் தத்தமது பிரதேச மட்டத்திலான ஆட்டங்களில் ஜொலித்து வந்தன. சுதந்திரத்திற்கு பின்னதான எழுபது வருடங்களில் வளர்க்கப்பட்ட, அதற்கு மேல் வளர வழி தெரியாத பயிர்களாக அவை எதற்கோ ஏங்கி நின்றன.

ஆனாலும் பிறிமியர் லீக்கிற்கான சிறந்த வீரர்களை வழங்கக் கூடிய வங்கி போல இன்று பல கழகங்கள் இருக்கின்றன. அவர்கள் தாமாக அடுத்த கட்டத்திற்குள் நுழைய இந்த ஆரம்பம் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

விளையாட்டு தொழில்ரீதியாக மாறும் காலம் மலர்வதால் இளையோரிடையே ஒரு புதிய உதைபந்தாட்ட உற்சாகம் கரை புரண்டோடப் போகிறது.

விளையாட்டு சோறு தருமா என்ற கேள்விக்கு, இப்போதுதான் ஆம் என்ற விடை கிடைக்கப் போகிறது. இன்று வளர்ந்த நாடுகளின் லீக் ஆட்டங்களில் ஆடும் உதைபந்தாட்ட வீரர்களே மிகப் பெரும் பணம் குவிக்கும் இயந்திரங்களாக இருக்கிறார்கள்.

போட்டிகளில் வழங்கப்படும் பரிசுத்தொகைகளும், வீரர்களுக்கு வழங்கப்படும் விலையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் எகிறிவிடும். வெகு விரைவில் வடக்குக் கிழக்கில் உதை பந்தாட்டம் பணம் தரும் பெரிய ஆட்டமாக மலர்ந்து விடப் போவது தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் இலங்கைத் தீவின் மற்றைய பகுதிகளின் லீக் ஆட்டங்களுக்கு வீரர்களை வழங்கும் சிறந்த விளையாட்டு பிராந்தியமாகவும் வடக்குக் கிழக்கு மாறும்.

எதிர்காலத்தில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளை நோக்கி நமது வீரர்கள் நட்சத்திர வீரர்களாக பயணிப்பதற்கும் இந்த முயற்சி வழிகாட்டும் என்ற இலக்கில் சிந்திக்க வேண்டும்.

பிறிமியர் லீக் ஆட்டங்களை தனியே தொழில் முறை என்று மட்டும் பார்க்க முடியாது, அது சமுதாயத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஐரோப்பிய வரலாறு.

இது வரை காலமும் தமது பிரதேசங்களில் உள்ள அணிகளை வெல்வதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்ட கழகங்கள், தமது வீரர்களை பிறிமியர் லீக் ஆட்டங்களுக்கு அமைவாக வளர்த்தெடுக்க முயல்வதே ஒரு வளர்ச்சியல்லவா..?

இதனால் உதை பந்தாட்டம் ஒரு கல்வியாகவும், ஒழுக்கமாகவும் மாற்றமடையும். அது பாடசாலை வாழ்வு, சமுதாய வாழ்வில் ஒரு புதிய பரிமாணத்தை இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்தி, அவர்களுடைய ஆர்வத்தை நிபுணத்துவ விளையாட்டின் பால் திருப்பி விடும்.

அகில இலங்கை அணி முதல், தென்னமெரிக்கா வரை சிறந்த உதைபந்தாட்ட வீரர்களுக்கு சந்தை இருக்கிறது. அந்தத் தேடலில் நமது இளைஞர் இறங்க இந்தப் போட்டிகள் வழிகாட்டும்.

நம்மிடையே ஒரு மரடோனாவும், ஒரு றொனால்டோவும், ஒரு மெஸியும் ஏன் மலர முடியாது? நிச்சயம் முடியும், அந்த நாள் தெரிகிறது.

பொதுவாக பிறிமியர் லீக் ஆட்டங்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால் அதன் தராதரம் பெரிய வளர்ச்சி கண்டு விடும். அதன் பின்னர் உணவு, பழக்கம், தேகப்பயிற்சி, உதைபந்தாட்டக் கல்வி என்று வாழ்க்கை அடிதலையாக மாற்றமடையும். அது நாளாவட்டத்தில் சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கான விளை நிலமாகவும் உருவெடுக்கும்.

பிறிமியர் லீக் ஆட்டங்கள் உள்ள நாடுகளில் இளையோர் குற்றச் செயல்களின் அளவு குறைவாகவும், சமுதாய ஒழுக்கம் சர்வதேச தரத்தை நோக்கிய வளர்ச்சியாகவும் இருக்கும்.

பல்கலைக்கழக படிப்பல்ல உதைபந்தாட்டமே சிறந்த கல்வி என்பதை சமுதாயம் கண்டு பிடிக்கும் திருநாளும் வரும்.

இப்படி நம்ப முடியாத பல மாற்றங்கள் ஏற்படும்.

சேரிப் பகுதியில் பிறந்த அல்பேனிய பின்னணி கொண்ட பிரான்சிய வீரன் ஸிடன் உலகத்தின் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக தேர்வானதும், உலகப் பெரும் பணக்காரன் ஆனதும் லீக் ஆட்டங்களால்தான்.

போத்துக்கேய கிறிஸ்டியானோ றொனால்டோ உலகப் புகழ் பெற்றது லீக் ஆட்டங்களில் இருந்துதானே?

இன்று ஆர்ஜண்டீனாவில் மரடோனாவுக்கு கோயில் கட்டி வழிபாடுகிறார்கள் எதற்காக? உதை பந்தாட்ட வீரன் என்பதாலேயே..

கி.பி - கி.மு என்று இயேசு நாதரை வைத்து காலம் கணிப்பிடப்பட்டதைப் போல மரடோனாவுக்கு முன் பின் என்று ஆர்ஜண்டீனாவில் ஒரு காலக்கணக்கு கடைப்பிடிக்கப்படுகிறதே ஏன்? லீக் ஆட்டங்களால் வந்த உயர்வே.


கல்வி போல விளையாட்டையும் கற்று, உதைபந்தாட்ட பாடசாலைகள் சென்று விளையாட்டை வாழ்வாக்கும் புதிய காலத்தை உருவாக்க லீக் ஆட்டங்கள் உதவும்.

பொருளாதாரம், விளையாட்டையும், அது போல விளையாட்டு பொருளாதாரத்தையும், இவை இரண்டும் சமுதாயத்தையும் மாறி மாறி உந்தித் தள்ளி சமுதாயத்தை மேல் நோக்கிச் உயர்த்திச் செல்லும்.

மேலும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு வளரவும் இதுபோன்ற லீக் ஆட்டங்கள் உதவும். தெற்கில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் இறக்குமதியாகும்போது விளையாட்டு வர்த்தகமாக மாறும்.

ஆட்டங்களுக்கான லொத்தர், பந்தயங்கள் போன்றன உருவாகும், மத்தியஸ்தர், பயிற்சியாளர், மைதானம், சத்துணவு ... சார்ந்த பல கிளைத் தொழில்கள் மலரும்.

இப்படி பிறிமியர் லீக் ஆட்டத்தின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆனால் ஒரு நாட்டில் பிறிமியர் லீக் ஆட்டம் ஆரம்பித்துவிட்டால் அதில் எல்லோராலும் இடம் பெற இயலாத நிலை வரும். ஆகவே தரமான வீரர்களை உருவாக்குவது எப்படி? என்ற நோக்கில் கழகங்கள் தம்மை மாற்ற வேண்டிய தவிர்க்க முடியாத நிலையும் வரும்.

பொறுமை, சகிப்புத்தன்மை, வெற்றி தோல்விகளை ஏற்கும் பண்பு, எழுத்து முறையான சட்ட ஒப்பந்தங்களுக்குள் விளையாட்டு நகர்த்தப்படுதல் போன்ற பல மாற்றங்கள் வரும்.

சாதாரண சமுதாயம் வேறு.. பிறிமியர் லீக் சமுதாயம் வேறு.

வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும்.

ரஸ்யாவில் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் ஆரம்பமாகும் தருணத்தில் ஆரம்பிக்கும் பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் வடக்குக் கிழக்கின் வைகறையில் ஒரு புதிய சூரியனை எழுப்பப் போகிறது என்பதை எண்ணினால் மகிழ்ச்சிக்கு குறைவேது.

சமுதாயத்தை மலர்விக்கும் இது போன்ற பணிகளுக்கு வளர்ந்த பின் ஆதரவு கொடுப்பதை விட இப்போது ஆதரவு கொடுப்பதே சிறந்த புத்திசாலித்தனமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -