காளை மாடுகளை வெட்டுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்று பசு மாடுகளை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை தலவாக்கலை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்துள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் 22.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 244 கிலோ கிராம் பசு மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளது. பசுமாடுகளை வளர்ப்பதற்காக தலவாக்கலை பசு வைத்தியரின் அனுமதியை பெற்று பசு மாடுகளை வளர்ப்பதற்காக அட்டன்,கினிகத்தேன, நாவலப்பிட்டிய பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வழியில் இவ்வாறு இறைச்சிக்காக பசு மாடுகளை வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
சட்ட விரோதமாக பசு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தலவாக்கலை விசேட அதிரடிபடையினர் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து இறைச்சிக்காக வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட பசு மாடு ஒன்றையும் இறைச்சிக்காக வெட்டிய நிலையில் காணப்பட்ட பசு மாடு ஒன்றினையும் மீட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்து தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பசு மாடு மற்றும் பசு இறைச்சியையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் 24.4.2018 செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.