ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
காலநிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிடையே கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடாத்துவுள்ளதாக பாகிஸ்தான் பாகிஸ்தான் காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான், அந்நாட்டுக்கு சென்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான் மற்றும் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) அவரது அமைச்சில் நடைபெற்றது.
பாகிஸ்தான் நாட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகள், நடைமுறைப்படுத்தப்படும் வெள்ளத்தடுப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இச்சத்திப்பில் விரிவாக கலந்துரையாடினார்.
காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான், பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் நீர் சுத்திகரிப்பு சம்மந்தமாகவும் விளக்கினார். உறைந்த பனிப்பாறைகள் மற்றும் அணை ஆகியவற்றிலிருந்து நீரை பெற்றுக்கொள்ள புதிய அணைகள் கட்டப்படுகின்றன. சீன நீர்வள முகாமைத்துவ முறையை திறம்பட நீர் முகாமைத்துவத்துவத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
காலநிலை மாற்றத்தின் பல எதிர்மறை தாக்கங்கள் நிகழ்கின்றன. இதனை எதிர்கொள்ளும் நோக்கில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை அனர்த்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக “பசுமைப் போட்டி”தொடரொன்று இலங்கை, பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கிடையில் நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் காலநிலை மாற்றத்துக்கு என தனியான அமைச்சு இயங்குவது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானின் நிபுணத்துவத்திலிருந்து பேரழிவு முகாமைத்துவம் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும், பொது விழிப்புணர்வுக்காக கிரிக்கெட் போட்டியை நடாத்தும் பாகிஸ்தானின் திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டினார். இந்தப் போட்டியை ஒழுங்கமைப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் பேசுவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையிலான சந்திப்பும் நேற்று (12) எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் குறித்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரம், சனத்தொகை மற்றும் விவசாயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றுவரும் SACOSAN எனப்படும் தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு தொடர்பான 7ஆவது மாநட்டின் நிறைவு விழாவில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றினார்.
இஸ்லாமாபாத் நகரில் 10 முதல் 14 வரை நடைபெறும் SACOSAN எனப்படும் தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு தொடர்பான 7ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது.
தெற்காசிய நாடுகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளர். நீர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பகுதிகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கையொப்பமிட்டார்.