நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கமைய, கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான
வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்க தலைவர். R. ராஜசேகரம் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகின்றது. இதில் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அனைத்துப் பீடங்கள், கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம் என்பவற்றில் பணியாற்றும் பெருமளவிலான கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018.02.28ம் திகதி முதல் இலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் தொடர்
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த காலங்களில் கவனஈர்ப்பு போராட்டம் மற்றும் அடையாள பணிபகிஷ்கரிப்புகளை முன்னெடுத்திருந்த நிலையில் ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவு அதிகரிப்புக்கள் மற்றும் ஏனைய விடயங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாமையை ஆட்சேபித்து #இன்றுடன்_34 நாட்களாக தொடர் பணிபகிஷ்கரிப்பில் உள்ளனர்.
பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இந்நாட்டின் பிரதமர், உயர்கல்வி அமைச்சர், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் கல்விசாரா ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் உரிய தீர்வுகள் இதுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2018.03.28ம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்சங்க சம்மேளன பிரநிதிகள் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க இவ் உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தப்படுகின்றது.
மேற்படி தீர்மானத்திற்கிணங்க 2018.03.29ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டதுடன், இன்று திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கொழும்பில், உயர்கல்வி அமைச்சு பல்கலைக்கழக, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக கல்ழிசாரா ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலில் உரிய தீர்வுகள் எட்டப்படாதவிடத்து ஊழியர் போராட்டமானது முன்னரைவிட மாறுபட்ட கோணத்தில் மிகவும் வீரியமான முறையில் முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகள் நடைபெற்று வருதாக தெரிவிக்கப்படுகின்றது.