அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மஸ்கெலியா சாமிமலை மொக்கா தோட்டத்தை சேர்ந்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டு குடும்பங்களை சேர்ந்த 30 பேர் தோட்டத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியானது 21.05.2018 அன்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாகவே இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்த மழையினால் குறித்த லயன் குடியிருப்பு பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன் மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே பாதுகாப்பின் நிமித்தம் தற்காலிகமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அபாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.