தேசிய அரசாங்கம் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் பாடசாலைகள் இதற்கு குந்தகம் விளைவிப்பதை அனுமதிக்கமுடியாது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயாவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என அப்பாடசாலையின் ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலைக்கு முன்பாக கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் கருத்துவினவியபோதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘ஏனைய மதங்களின் ஆசிரியர்களான பௌத்த பிக்கு ஆசிரியர்கள், கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கும கிறிஸ்தவ பெண் ஆசிரியைகள் தமது கலாசார உடைகளுடனே பாடசாலைக்கு வருகிறார்கள். இந்நிலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என மறுப்பது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
ஜனாதிபதி நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கென்று தனியான அமைச்சொன்றினை நிறுவி செயற்படும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியின் நடவடிக்கைகள் முற்றிலும் தவறானதாகும். பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சி செய்யும் சந்தர்ப்பத்தில் அக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
முஸ்லிம்களின் அடிப்படை உரிமையான ஆடை கலாசாரத்தை எவராலும் தடைகளுக்கு உட்படுத்தமுடியாது. இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளேன்.
சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். இப்பிரச்சினைக்கு ஆசிரியைகளை இடமாற்றம் செய்வதன்மூலம் தீர்வு காணமுடியாது. கலந்துரையாடல் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றார்.