சீன நாட்டின் குவாங்சி மாநில வர்த்தக திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டையோ வீஹொங் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை இன்று (16) புதன்கிழமை மாலை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது குவாங்சி மாநில வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் டையோ வீஹொங், அத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மா ஜிக்சியன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.என். அல்தாப் ஹுஸைன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெறவுள்ள சீன நாட்டின் குவாங்சி மாநிலத்திலுள்ள 60 வதுக்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் பங்கு பற்றும் வணிக மாநாட்டிற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பதற்கான அழைப்பிதழை இதன்போது வழங்கினர்.
மேலும் குறித்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் சீன நாட்டில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சிக்கும் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்குமாறு பிரதி அமைச்சருக்கு அழைப்புவிடுத்தனர்.