ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெறவேண்டும். சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடங்களும் உள்ளடங்கலான முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இன்று (04) கெட்டம்பே நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
நாட்டின் அதிகாரப் பகிர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் அழுத்தமான வேண்டுகோளை சிறுபான்மை கட்சிகள் முன்வைத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனை வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியலமைப்பின் வழிநடத்தல் குழு பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி, புதிய யாப்பை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றுகின்ற 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் முழுமையாக நடைபெறவேண்டும். அத்துடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது போன்ற விடயங்களை உள்ளடக்கிய சிறுபான்மை கட்சிகள் எல்லோரும் கூட்டாக ஒரு அறிக்கையை விடுத்துள்ளோம் என்றார்.
குண்டசாலை, ஹாரகம, மரஸன்ன, கலகெதர, பூஜாப்பிட்டிய, அக்குறணை, பொல்கொல்ல, யடிநுவர பன்வில, உடுநுவர, கினிகத்தென்ன போன்ற பிரதேசங்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுடன் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, கண்டி மாவட்ட பொது முகாமையாளர் மீகொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.