இனிமேல் சபையின் சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது!
காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் ஜெயசிறில் அறிவிப்பு!
காரைதீவு நிருபர் சகா
எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுகசீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.
இவ்வாறு அறிவித்தல் வழங்கும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நுண்கடன் வழங்குவோர் எதிர்வரும் 14ஆம் திகதி மு.ப 9.00மணிக்கு சபைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்:
நுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இன்னமும் அனுமதிக்கமுடியாது. குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன.
அவரவர் கொள்ளவிற்கு ஏற்ப நுண்கடன் வழங்கவேண்டும். கடன்பெற்றவர்கள் திரும்பச்செலுத்தக்கூடியவர்களா என்பதை பரிசீலனைசெய்த பின்பே கடன்வழங்கவேண்டும்.
ஒருநாள் கடன் ஒருவாரக்கடன் ஒருமாதக்கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. சிலவேளை இது மதமாற்றும் கருவியாக பாலியல்லஞ்சம்கோரும் துரும்பாக பயன்படுத்தப்படுவதைக்காண்கின்றோம்.
இதனை ஒருசீரான நிலைக்குக்கொண்டுவரவேண்டிய தேவையுள்ளது.
எனவே இன்றிலிருந்து காரைதீவுப்பிரதேசத்துள் நுண்கடன் வழங்குவதை நிறுத்தி எதிர்வரும் திங்களன்று ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுக்கின்றேன்.