கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்தார். தம்மைச் சந்திக்க விரும்பிய கோத்தபாயவைத் தாம் விரும்பி அழைத்ததின் பயனாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அஇஜஉ சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
அஇஜஉ சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி, அதன் செயலாளர் எம்.எம். முபாரக் மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் கோத்தபாய நட்புரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜம்மியத்துல் உலமா சபை சார்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்குப் பல செய்திகள் எத்தி வைக்கப்பட்டன.
''முஸ்லிம்களின் தாயகம் இலங்கையே. இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மிகுந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள். ஆயினும் இங்கே முஸ்லிம்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி பேணப்பட வேண்டும்.
பெரும்பான்மைச் சமூகத்துடன் சமாதானமாக வாழவே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள். ஆயினும், பௌத்த பிக்குகளிற் பலர் முஸ்லிம்களின் மீது குரோத மனப்பான்மையை வளர்த்து வருகின்றார்கள். இதனை இல்லாதொழிக்க நீங்கள் உதவ வேண்டும்.''
என்று ஜம்மிய்யத்துல் உலமா சபை சார்பில் கூறப்பட்டது.
இவற்றிற்கு விளக்கம் கூறுமாப்போல் கோத்தபாய பின்வருமாறு சொன்னார்:
''காலியில் நடந்த பொது பல சேனாவின் அலுவலகத் திறப்பு விழாவிற் கலந்து கொள்ளுமாறு எனக்கு அவர்கள் அழைப்பு அனுப்பியிருந்தார்கள். ஆகவேதான் நான் அதிற் கலந்து கொண்டேன்.
மேலும், பொதுபல சேனா அமைப்பை நிறுவியவன் நானென்றும், அந்த அமைப்பின் ஆதரவாளன் நானென்றும் முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான நினைப்பு. உண்மையில், பொது பல சேனாவுக்கும் எனக்கும் எத்தகைய தொடர்புகளும் கிடையாது!''
சந்திப்பு சிநேகபூர்வமாக நடைபெற்று முடிந்ததாக ஜம்மியத்துல் உலமா சபைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.