தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்

முர்ஷிட்-
மிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடன் கடந்து வந்த தொலை தூர அரசியல் பயணத்தில் முதன் முதலாக இளைஞர்களான உங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கின்ற ஒரு திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்காலத்தில் தொழில் ரீதியாக அரச மற்றும் தனியாரோடு இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து தொழில் துறைகளை உங்கள் போன்ற இளைஞர்களுக்கும் பகிர்ந்து செய்வதற்கான வேலைத் திட்டங்களை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த பணியில் உங்களையும் இணைந்து நாங்கள் கௌரவப்படுத்துவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியினருக்கான கௌரவம் கட்சி, தலைமை மற்றும் என்னிடத்திலும் எப்போதும் பலமாக இருக்கும் என்பதை நூற்றுக்கு நூறு வீதம் நம்புங்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கல்குடாவை ஒரு போதையற்ற பிரதேசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு, எங்களிடம் உள்ள அரசியல் என்கின்ற ஆயுதத்தை வைத்து எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ அந்தப் பணியை செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பரிமாணம் எவ்வாறு இருந்தது என்றால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரிதான், மாகாண சபை உறுப்பினராக இருந்தாலும் சரிதான் கல்குடாவுக்கு கிடைத்து விடக் கூடாது என்று தான் இருந்தார்கள்.
நான் 2004ம் ஆண்டு தேர்தல் கேட்கின்ற போது ஏறாவூரில் பசீர் சேகுதாவூத் கேட்கின்ற நிலவரம் வந்த போது கல்குடாவில் மூன்று பேரை போட்டார்கள். மூன்றாக வாக்கு பிரியுமாக இருந்தால் பசீர் சேகுதாவூத் இலகுவாக வென்று விடுவார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் கணிப்பு அவ்வாறு இருந்தது.
கல்குடாவில் ஒட்டு மொத்தமாக இருந்து செயற்பட்டதிலும் கூட முதல் வேட்பாளராக வந்தும் கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக்கு இருபத்தையாயிரம் பேர் வாக்களித்தார்கள். 19600 பேர் மாத்திரம் எனக்கு வாக்களித்தார்கள். 5500 பேர் ஏறாவூரில் உள்ள பசீர் சேகுதாவூத்துக்கு வாக்களித்தார்.
அதனுடைய அர்த்தம் என்னவென்று சொன்னால் இந்த அடிப்படையிலே ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் பேர் கல்குடாவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரக்கூடாது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அவர்களை இவ்வாறு வழிகாட்டியது.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரை நீங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கின்ற பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. அதேபோன்று மக்கள் காங்கிரஸின் தலைவரை அழைத்து கல்குடாப் பிரதேசத்தில் பாரியளவில் இளைஞர் மகாநாடு ஒன்றை நடாத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.
கல்குடாப் பிரதேசத்தில் முக்கிய செல்வாக்கு செலுத்துகின்ற அணியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி எதிர்காலத்திலும் இருக்கும் என்பதை உறுதியாக சொல்லுகின்றேன். குறிப்பிட்ட கால கட்டத்தினுள் கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான முனைப்பின் ஆரம்ப பணி தான் இந்தக் கூட்டம்.

தொழில் வாய்ப்பு, கல்வி ரீதியான உதவி, தொழில் வழிகாட்டல், தனிப்பட்ட விடயங்கள், கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் கை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதியின் பொறுப்பு என்கின்ற விடயத்தில் இந்த ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.
எதிர்காலத்தில் அனைத்து வேலைத் திட்டங்களையும் இளைஞர்களின் கையில் வழங்கப்பட்டு நீங்களே அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் உங்களுக்கு அந்த ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம் என்றார்.

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.அமீர், எம்.எப்.ஜவ்பர், மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஏ.எம்.றாசீக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருநூற்றி ஜம்பதுக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களையும், திறந்த கேள்விகளையும் பகிர்ந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -