திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட மெதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் பற்றாக்குறையாக காணப்பட்ட கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை எதிர்வரும் திங்கள் கிழமை நியமிப்பதாக
கிழக்கு மாகாண ஆளஞநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று முன் தினம் புதன்கிழமை (23) தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை மூடி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகவிற்கும் மெதவாச்சி சிங்கள மஹா வித்தியாலயத்தின் பெற்றோர்களுக்குமிடையிலான கலந்துறையாடல் நடைபெற்றது.
அப்போது ஆளுநர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இக்கலந்துறையாடலின் போது தங்களுடைய பாடசாலையில் 294 மாணவர்கள் கல்வியை கற்று வருவதாகவும் 17 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 11 ஆசிரியர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் இன்னும் ஏழு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதுடன் மிக முக்கியமான பாடங்களான கணிதம் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஆசிரியர் இல்லாமை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பெற்றோர்கள் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதேவேளை நிரந்தர அதிபர் இல்லாமையினாலும் பாடசாலையின் வளர்ச்சிகள் மந்தநிலையில் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹீத போகொல்லாகம எதிர்வரும் திங்கள்கிழமை 28ம் திகதி கணிதம்,விஞ்ஞானம் பாடத்திற்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிப்பதாகவும் தரமான அதிபரை உடனடியாக நியமிக்குமாறும் ஆளுனர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.