இலங்கை அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்துவைக்காது! த.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார்!


நேர்முகம் கண்டவர்.: வி.ரி.சகாதேவராஜா -
லங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது? இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இருக்கும்வரை இந்தநாட்டில் இனப்பிரச்சினை தீராது. தீhக்கவும் முடியாது.

இவ்வாறு அடித்துக்கூறுகின்றார் தமிழர் விடுதலைக் கூட்டணயின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி.
அம்பாறை மாவட்டத்திற்கான 3நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்தபோது கல்முனையில் அவர் தங்கியிருந்த விடுதியில்வைத்து எமது வாசகர்களுக்காக பேட்டியொன்றை எடுத்தேன்.

அவரளித்த நேர்முகத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
85வயதான ஆனந்தசங்கரி எதனையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக ஆணித்தரமாகக்கூறுகின்ற பழக்கமுடையவர். பழைய பல விடயங்களை மீட்பதற்கு சில சந்தர்ப்பங்களில் அவரது வயது தடையாகவிருந்ததையும் இவ்வண் சுட்டிக்காட்டலாம்.
தனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை பொய்பேசியதில்லை. இன்றும் உண்மைதான் பேசிவருகின்றேன் என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஆனந்த சங்கரி எமக்களித்த பேட்டியை முழுமையாகத்தருகின்றேன்.

கேள்வி: தமிழர் பிரச்சினை தீர வழியில்லையா?
விடை: வரலாற்றில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன.அத்தனையையும் தவறவிட்டுவிட்டு இன்று கதையளக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு உண்மையில் துரோகமிழைத்தவர்கள் அவர்களே.

கேள்வி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
விடை: இறுதியாக நடைபெற்றதேர்தலுக்கு முன்பாவது தமிழர் அரசியலை ஒன்றுபடுத்தியிருக்கலாம். அதனைச்செய்யவில்லை.
ஆனால் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அதாவது சுயலாபத்திற்காக யாருடனெல்லாம் கூட்டுச்சேரமுடியாதென்று எள்ளி நகையாடினார்களோ அவர்களுடன் எல்லாம் கூட்டுவைத்துள்ளார்கள். இதைவிட துரோகமிருக்குமா?

கேள்வி: அது சாணக்கியமாகாதா?
விடை: இல்லாத பொய்யெல்லாம் சொல்லி தலைமையைப் பெறுவது சாணக்கியமா? தேர்தல் காலத்தில் துரோகியாக பார்க்கப்பட்டவர் எல்லாம் தேர்தல் முடிந்ததும் சகபாடியாக மாற்றப்பட்டது சரியா?
கேள்வி: இறுதியாக நடைபெற்ற தேர்தல் பெறுபேறு தொடர்பாக உங்கள்கருத்து என்ன?
விடை: வடக்கு கிழக்கைப் பார்த்தால் த.தே.கூட்டமைப்பிற்கு படுதோல்வி. எந்தவொரு சபையையும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலை. இது பெரிய கட்சி என்று மார்தட்டி நிற்கும் கட்சிக்கு இது அழகா? அவர்களது பேராசை சுயநலத்திற்கு மக்களைப் பலிக்கடாவாக்கிவருகின்றார்கள். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை வெறுத்துவருகின்றார்கள் என்பதே எனது கருத்து.

கேள்வி: தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டியுள்ளார்கள் என்று கூறுகின்றீர்களா?
விடை: நிச்சயமாக. கடந்த 30வருட காலமாக மக்களை ஏமாற்றிப்பிழைத்துவந்த த.தே.கூட்டமைப்பை மக்கள் இன்று ஏமாற்றத்தொடங்கியுள்ளனர். தேர்தல் பெறுபேறும் அதனைத்தான் உணர்த்துகின்றன. வடக்கு கிழக்கில் 30வீத வாக்குக்கூட விழவில்லை. மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியாது. மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். இத்தோடாவது அவர்கள் திருந்தவேண்டும்.

கேள்வி: உங்கள் த.வி.கூட்டணி தேர்தலில் பெற்ற பெறுபேறு திருப்தியா?
விடை: எம்மைப்பொறுத்தவரை 78ஆசனங்கள் கிடைத்துள்ளன. அது திருப்தி. நாம்தான் தமிழ்மக்களின் உண்மையானகட்சி. எதிர்காலத்தில் எம்முடன் இணையும் கட்சிகளை இணைத்துக்கொண்டு முன்னேறமுடியும்.
கேள்வி: த.வி.கூட்டணியின் தோற்றம் பற்றிக்கூறுங்கள்?
விடை: 1972இல் இலங்கை தமிழரசுக்கட்சியும் இலங்கைத் தமிழ்காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணியாக தோற்றம்பெற்றது. அப்போது தமிழரசுக்கட்சிக்கு தந்தை செல்வா தலைவராகவும் செயலாளராக அண்ணன் அமிர்தலிங்கமும் இருந்தனர். தமிழ் காங்கிரசுக்கு நான் தலைவராகவும் அண்ணன் சிவசிதம்பரம் செயலாளராகவுமிருந்தோம். உருவான த.வி.கூட்டணிக்கு தலைவராக நானே தெரிவானேன்.

கேள்வி: அப்படியெனின் த.தே.கூட்டமைப்பு உருவானதில் தங்களின் பங்களிப்பு எவ்வாறிருந்தது?
விடை: 1972இலிருந்து 28 – 30 வருடகாலமாக ஒரு பிரச்சினையுமில்லாமல் இயங்கிவந்தோம். அதனைக்கூடவிருந்து பின்னர் கெடுத்தவர்களை உலகறியும். த.தே.கூட்டமைப்பு என்பது இல்லாத ஒன்று. எமது த.வி.கூட்டணியை அழிக்க அல்லது பலவீனப்படுத்த எம்மோடிருந்த சுயலாப தமிழ்த்தலைமைகளின் சதியின் வெளிப்பாடே அது.

கேள்வி: த.தே.கூட்டமைப்பின் பிரதான தமிழரசுக்கட்சியின் வகிபாகம் எப்படி இருந்தது?
விடை: அப்போது த.அ.கட்சியே இல்லை. இப்போதுள்ள செயலாளர் துரைராசசிங்கம் எப்போது வந்தவர். த.அ.கட்சியின் அங்கத்தவரா? சம்பந்தரால்தான் இத்தனை பிரச்சினையும். கூடவிருந்த மாவைசேனாதிராசா குறைந்தவரல்ல. தமிழினத்தின் கோடரிக்காம்புகளாக இவர்களே இருந்துவந்துள்ளனர்.

கேள்வி: தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் இல்லையென்று கூறினீர்களா?
விடை: ஒருபோதும் இல்லை. இனப்பிரச்சினை தீர்வின்போது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தியே பேசவேண்டும் என்பதில் உறுதியாகவிருந்தேன்.

கேள்வி; : இன்றையநிலையில் சமஸ்எ என்கிறார்களே . இது சாத்தியமா?
விடை: அன்று ஜனாதிபதி தேர்தலில் சமஸடியை முன்வைத்து ரணிலும் ஒற்றையாட்சியை முன்வைத்து மகிந்தவும் போட்டியிட்டனர். சமஸ்டியை வலியுறுத்துவதாககூறும் சம்பந்தனும் மாவையும் புலியைப்பயன்படுத்தி மகிந்தவை ஆதரிக்கச் சொன்னதேன்? தேர்தலைப்பகிஸ்கரிக்கச்சொன்னார்கள். அன்று ரணிலுக்கு தமிழ்மககள் போட்டிருந்தால் அவர்தான் ஜனாதிபதி. சமஸ்டி பற்றிச்சிந்தித்திருக்கலாம். வாய்ப்பைத் தவறவிட்டார்கள
பின்பு அடுத்த தேர்தலில் விடுதலைப்போராட்டத்தை நசுக்கிய தமிழினத்தை அழித்த சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கச்சொன்னார்கள். உண்மையில் அன்றே இவர்கள் நஞ்சு குடித்துச்செத்திருக்கவேண்டும்.

கேள்வி: அப்படியெனின் சம்பந்தர் ஜயாவிற்கு அரசியல் ஞானமில்லையென்று கூறுகின்றீர்களா?
விடை: நிச்சயமாக. இல்லாதிருந்தால் தமிழினம் இதுவரைக்கும் எங்கேயோ சென்றிருக்கும். என்னை விட பாராளுமன்ற அனுபவம் 7வருடம் அவர் குறைவு . அரசியலில் 12வருடங்கள் குறைவு. இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டு இவர்கள் இந்த சமுகத்திற்காக சாதித்ததென்ன? துரோகத்தைச் செய்தார்கள்.

கேள்வி: அப்படியனென துரோகம் செய்தார்கள்?
விடை: 2004தேர்தலில் புலிகளை கைக்குள்போட்டுக்கொண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினார்கள். இவர்களில் ஒருவர் 1லட்சத்து 20ஆயிரம் வாக்குகள் எடுத்தார். ஆனால்அடுத்த 2010தேர்தலில் அவர் ஆக அதில் 5வீதமான வாக்குகளையே எடுத்தார். எனின் எப்படி 2004 தேர்தல் நடந்தது என்பதை அறிவீர்கள். சரி.இவர்கள் அங்கிருந்து எதனைச் சாதித்தார்கள்? புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.

கேள்வி: புதிய அரசியலமைப்பு சரிவரும் என்கிறீர்களா?
விடை: கடைசிவரைக்கும் சரிவராது. ஆனால் அதைவைத்து த.தே.கூட்டமைப்பு கடந்த தேர்தலை காய்நகர்த்தியது. இன்று மாகாணசபைக்காக மீண்டும் அதனைப்பயன்படுத்தவுள்ளது.

கேள்வி: அப்படியெனின் தங்களின் மாற்று ஆலோசனை என்ன?
விடை: இருக்கின்ற 1978ஆம் ஆண்டு யாப்பில் உள்ள சாதக பாதகங்களை இனங்கண்டு அதில் சிலவற்றை திருத்தலாம். குறிப்பாக அடிப்படை உரிமைகள் சட்டத்தை தென்னாபிரிக்காவில் இருப்பது போன்று சேர்த்துவிட்டால் அதுவே போதுமானது. மற்றது காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கும் பராதீனப்படுத்துவது. இவ்வாறான சில மாற்றங்களுடன் அதனைத்திருத்தினால் சிறுபான்மைக்கு ஒரு காப்பீடாக அமையுமே தவிர புதிய யாப்பு இனப்பிரச்சினை தீர்வு 2020க்குள்வருமென்று கூறுவதெல்லாம் மக்களைப் பேய்க்காட்டவே தவிர உண்மைஒன்றுமில்லை.

கேள்வி;: உங்களை தமிழினத்துரோகி என்றும் சிலர் சொல்கிறார்களே?
விடை: த.தே.கூட்டமைப்பிலிருக்கும் இருந்த சிலகட்சிகள்தான் ஆலாலசுந்தரத்தைக் கொன்றார்கள் அமிர்தலிங்கத்தை கொன்றார்கள். இப்படிப்பலரைக்கொன்றார்கள். தமிழினத்தின் தலைவர்களைக்கொன்றவர்கள் உத்தமர்கள். அவ்வப்போது பச்சைப்பொய்களைச்சொல்லி ஏமாற்று அரசியலைச்செய்து வருபவர்கள் உத்தமர்கள். தியாகிகள்.
வவுனியாவில் இருந்த ஒரு கட்சி எத்தனை தமிழ்;மக்களை கொன்றுகுவித்தார்கள் என்பது உலகறியும். இன்று தியாகிவேடம் பூணுகிறார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை கொண்டகொள்கையிலிருந்து மாறாமல் பொய்பேசாமல் ஏமாற்று அரசியல் செய்யாமல் அரசியல்செய்யும் நான் துரோகியா?

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு உங்களின் வியூகம் அமையும்?
விடை: கடந்த தேர்தலில் மக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்துள்ளனர். அதனைவிட 100வீதம் மக்களைச்சென்றடைந்து வெற்றிபெறவேண்டுமென்பதே எமது நோக்கம். ஏனைய தமிழ்க்கட்சிகளையும் அழைக்கின்றேன். சிலகட்சிகள் திருந்திவரவேண்டும். நாம்கடந்ததேர்தலில் யாருடனும் பேரம் பேசவில்லை பதவிக்காக போகவும் இல்லை. ஆனால் கல்முனை பிரதிமேயர் எமது உறுப்பினர் காத்தமுத்து கணேசுக்குக் கிடைத்துள்ளது. நலல் விடயம். ஒற்றுமைகாத்து சமுகத்தை வளப்படுத்துவோம்.

கேள்வி: உங்களது அழைப்பைப்போல் த.தே.கூட்டைப்பும் எம்முடன்வந்த தமிழ்கட்டசிகள் சேரலாமென அழைத்தால்..
விடை: ஒருபோதும் இல்லை. நாம்தான் பழம்பெரும்கட்சி. தமிழினத்திற்கு போலிவார்த்தைகள்கூறி ஏமாற்றாமல் தூய்மையாக அரசியல் செய்துவருகின்றோம். எனவே எம்முடன்வந்துசேர்ந்தால் தமிழ்மக்களுக்கான சிறந்த வலுவான சக்தியாக மிளிரும் என்பதில் ஜயமில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -