அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 38000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அகதியான மக்களுக்கு உதவும் வகையிலேயே பிரதேச செயலாளருக்கூடாக உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதே வேளை, நாட்டிலுள்ள லங்கா சதொச முகாமையாளர்களுக்கு தமது கிளைகளிலுள்ள பொருட்களின் இருப்புக்களை அதிகரிக்குமாறும், மேலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளின் கொள்ளளவுகளை விஸ்தரிக்குமாறும் சதொச நிறுவனத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை தரைவழியாக கொண்டு செல்ல முடியாத பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக விமானம் ஊடாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு சதொச நிறுவனத் தலைவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.