மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க முடியாத கட்சி தலைமகளே இராணுவத்தை திட்டி தீர்க்கின்றன யாழ். கட்டளை தளபதி தர்ஷன சுட்டி காட்டுகிறார்

க்கள் நலன் சார்ந்த கொள்கை திட்டங்களை முன்வைத்து வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியாத சில கட்சி தலைமைகள் அவர்கள் அரசியலில் தப்பி பிழைக்க வேண்டும் என்பதற்காக இராணுவத்தின் மீது குற்றம் சுமத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர் நேற்று புதன்கிழமை காலை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். இதில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தை இராணுவம் பௌத்தமயமாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது தொடர்பாக இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

புத்த பகவானின் போதனைகள் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானவை அல்ல. மாறாக மனித குலம் முழுவதற்குமே பொதுமையானவை. மனிதாபிமானம், காருண்யம், அகிம்சை, சாந்தி, சமாதானம், சகிப்பு தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயரிய மானுட பண்புகளை இவை அடிப்படையாக கொண்டவை. இன்னொரு வகையில் சொன்னால் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை முறைமையை இவை போதிக்கின்றன.
எமது நாட்டில் புரையாடி போயிருந்த போர் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் உறவுகளே காணப்பட்டனர். ஆனால் இவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பிந்திய போர் வன்முறைகள் அற்ற அமைதி சூழலில் ஓரளவு நிம்மதியான இயல்பு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். எமது நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதி சூழல் தொடர்ந்தும் நீடித்து நிலைக்க வேண்டும். போர் வன்முறைகள் மீண்டும் வெடிக்கவே கூடாது. ஆகவேதான் வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை அனைத்து தரப்பினரும் பேணி, ஊக்குவித்து, முன்னெடுக்க வேண்டி உள்ளது. ஆகவேதான் வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை போதிக்கின்ற புத்த பகவானின் போதனைகளை செவிமடுக்கவும், சிந்திக்கவும், பின்பற்றவும் வேண்டியது காலத்தின் பொருத்தப்பாடு ஆகும். எமது நாட்டின் தேசிய பண்டிகைகளில் ஒன்றாகவும் வெசாக் பெருநாள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. இக்காரணங்களால்தான் போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் வெசாக் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆனால் நாம் எமது வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தை விளம்பரப்படுத்தவில்லை. எமது வெசாக் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பஸ்களில் ஆட்களை ஏற்றி வரவில்லை. அன்பர்கள் அவர்களாகவே அறிந்து வந்து வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தில் முழுமனதுடன் கலந்து கொண்டனர். மடை திறந்த வெள்ளம் போல மக்கள் கூட்டம் இதில் பங்கேற்றது. யாழ். மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்களுக்கு இதில் ஐந்தில் ஒரு பங்கு சனம்கூட பங்கேற்பதில்லை என்பதையும் நாம் அறிவோம்.
நிலைமை இவ்வாறு இருக்க யாழ்ப்பாண மாவட்டத்தை இராணுவம் பௌத்தமயம் ஆக்குவதற்கு வெசாக் கொண்டாட்டத்தை கருவியாக பயன்படுத்துகின்றது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அபாண்டமாக, அநியாயமாக குற்றம் சுமத்தி உள்ளது. இவர்களை போன்றவர்களால் யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது உள்ளது. பெருந்தொகை மக்களின் பங்கேற்புடன் பிரமாண்டமாக எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாது உள்ளது.

நான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்கின்றபோது எதற்காக வதந்திகளை கட்டவிழ்த்து விட்டு யாழ். மாவட்ட தமிழ் மக்களை பிழையாக வழி நடத்தி கொண்டே இருப்பதில் சந்தோசம் அடைகின்றீர்கள்? என்று வினவ உள்ளேன். யாழ்ப்பாண தமிழ் மக்களின் நலன் சார்ந்த வேலை திட்டங்களை இராணுவத்துடன் சேர்ந்து முன்னெடுத்து மக்கள் மனங்களில் இடம் பிடியுங்கள் என்று கேட்க உள்ளேன்.

உண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற திட்டம் எதுவும் எம்மிடம் கிடையாது. எவரையும் நாம் மதம் மாற்ற முயலவே இல்லை. அதே போல எவர் மீதும் எமக்கு பகைமை உணர்வோ, பழி தீர்க்கும் நோக்கமோ கிடையாது என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்கின்றேன். சிங்கள பௌத்தர்களுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான உறவு பாலமாகவே யாழ்ப்பாண மாவட்டத்தில் வெசாக் கொண்டாட்டம் அமைய பெற்றது என்பதே உண்மை ஆகும். இது எதிர்காலத்தில் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையில் கட்டி எழுப்பப்பட கூடிய நீடித்த அமைதி, நிலையான சமாதானம் ஆகியவற்றை கட்டியம் கூறி நிற்கின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -