சாய்ந்தமருது தாறுள் இல்மு கல்வி நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.முகம்மட் றியாஸ் மற்றும் செயலாளர் ஏ.றாசீக் ஆகியோரது தலைமையில் 2018-05-13 ஆம் திகதியன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது தாறுள் இல்மு கல்வி நிறுவனம் குறுகிய காலத்துக்குள் பிராந்தியத்தில் சிறந்த கல்விப்புலத்தை ஏற்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகும். நடப்பு ஆண்டில் திறமைகாட்டிய 284 மாணவர்கள் நிகழ்வின்போது சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.சலீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதல்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத், கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் மற்றும் கல்முனை பிராந்திய கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதல்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.