சாய்ந்தமருது பிரதேசத்தில் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகள் போடப்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களில் குப்பைகள் சேகரிக்கும் உழவு இயந்திர பெட்டிகளை தரித்து வைப்பதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாநகர சபை சுகாதார பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கு அருகில் நேற்று தொடக்கம் பெட்டியொன்று தரித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பெட்டியினுள் சேரும் குப்பைகள் தினசரி உடனுக்குடன் அகற்றப்படும் எனவும் பொது மக்கள் தமது வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற உணவுக் கழிவுகளை மாத்திரம் கொண்டு வந்து இப்பெட்டியினுள் போடுமாறும் வேறு பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உணவுக் கழிவுகள் தவிர்ந்த ஏனைய பொருட்களையும் பிளாஸ்ட்ரிக், கண்ணாடி மற்றும் இலத்திரனியல் கழிவுகளையும் தமது வீடுகளில் சேகரித்து வைத்து, மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் வரும்போது ஒப்படைக்குமாறு ஆணையாளர் அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் சில பள்ளிவாசல்கள், பாடசாலைகள், நூலகங்கள், மையவாடிகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அருகிலும் தோணா, பாலங்கள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களிலும் சில வீதிகளிலும் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமையினால் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்திருப்பதுடன் சூழல் மாசடைவதும் துர்நாற்றம் வீசுவதும் அவற்றை அகற்றுவதில் கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவினர் பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.