கொரிய நாட்டின் முதலீட்டு நிறுவனமான எம்.பி.ஜி (ஆடீபு) நிறுவனத்தின் பிரதித் தவிசாளர் ஜெய் சூ ஹன் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) புதன்கிழமை காலை சந்தித்து இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ஹெமந்த விக்ரமசிங்க, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.என். அல்தாப் ஹூசைன், சுகாதார அமைச்சரின் ஆலோசகர் உஜித் அனுராத மற்றும் எம்.பி.ஜி (ஆடீபு) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த நிறுவனம் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான துறைகள் மற்றும் சாத்தியப்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு குறித்த நிறுவனத்தின் நிதி உதவியில் வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்கள் சிலவற்றிற்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இச்சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டது.