நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா? பாதகமா?


நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா? பாதகமா?
=============================
வை எல் எஸ் ஹமீட்
( பாகம்-1)
னாதிபதித் தேர்தல்முறை சிறுபான்மைகளுக்கு சாதகமானது; என்பது பொதுவான கருத்து. ஏனெனில் சிறுபான்மைகளின் வாக்கு இல்லாது ஒருவர் இத்தேர்தலில் வெற்றிபெறுவது கடினம். இது கடந்த பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டது.
சிறுபான்மைகளின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி தொடர்ந்தும் சிறுபான்மைகளுக்கு சாதகமாக அல்லது ஆகக்குறைந்தது, சிறுபான்மை விடயத்தில் நேர்மையாக செயற்படுவார்; என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்றால் நிச்சயமாக இல்லை. இதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய ஜனாதிபதிதான்.

நாம் நல்லவர் என நினைத்து தெரிவு செய்கின்ற ஜனாதிபதி பிழையானவராக இருந்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்; அவரை மாற்றுவதற்கு. அதுவரை அவரது அட்டகாசத்தை நிறுத்துவதெப்படி?

அவ்வாறு நிறுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது வழி/பலம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருக்குமாயின் -ஜனாதிபதிப் பதவியின் அட்டகாசத்தையே கட்டுப்படுத்தக்கூடிய அவ்வழி/ அப்பலம்- அந்த ஜனாதிபதி பதவி இல்லாத நிலையில் அதாவது அரசுக்கு ஸ்திரத்தன்மை வழங்குகின்ற ஜனாதிபதிப் பதவி இல்லாத நிலையில்- அவ்வழியை/ அப்பலத்தைப் பயன்படுத்தி ஸ்த்திரத்தன்மையற்ற அல்லது ஸ்த்திரத்தன்மைகுறைந்த அரசிற்கூடாக சிறுபான்மைகளுக்காக அதன் கட்சிகள் எவ்வளவோ சாதிக்கலாம்!
அவ்வாறான ஒரு பலம் சிறுபான்மைகளுக்கு இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அது எப்போதும் இருக்கின்றதா? எப்போதுமே அல்லது எப்போதாவது அப்பலம் இருந்தால் அது சிறுபான்மைகளால் பாவிக்கப்பட்டிருக்கின்றதா? போன்ற கேள்விகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

குறிப்பாக, முஸ்லிம்கள் ஒன்று திரண்டு கொண்டுவந்த இந்த அரசு முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுகின்ற அசமந்தப் போக்கு இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக்கொண்டு வருகின்ற விரக்தி எந்த மஹிந்த ஆட்சியை இனவாத ஆட்சியென்று தூக்கிவீசினோமோ அந்த மஹிந்தவை இந்த நல்லாட்சியுடன் ஒப்பிட்டு அந்த ஆட்சியை மீண்டும் கொண்டுவருவது தொடர்பாக இன்று மீண்டும் சமூகத்திற்கு மத்தியில் சிந்தனையை துளிர்க்க வைத்திருக்கின்றது.

இது, ஜனாதிபதியை நாம் தெரிவுசெய்தோம் என்பதற்காக அவர் நமக்கு நியாயமானவராக செயற்படுவார்; என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை; என்பதை அழுத்திக் கூறுகின்றது. சிறுபான்மைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கியிருக்கின்ற ஜனாதிபதிப் பதவி சிறுபான்மைகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எப்போதும் சாதகமானது; என்பது ஒரு பொய்யான நம்பிக்கை என்பதைக் காட்டுகின்றது.

மஹிந்தவின் ஆட்சி இந்த நல்லாட்சியைவிட பரவாயில்லை; என்று சிலர் சிந்திக்குமளவுக்கு சென்றுகொண்டிருக்கின்ற இந்த ஆட்சியை இந்த சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்தும் பலம் நம்மவர்களிடம் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அது பாவிக்கப்பட்டதா? அவ்வாறு பாவிக்கப்பட்டும் “இந்நல்லாட்சியின்” பாதகமான போக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை; என்றால் இதற்கு மாற்றமாக மஹிந்தவை நோக்கி நமது சிலரின் சிந்தனை ஓடுவதில் நியாயங்கள் இருக்கலாம்; ஆனால் கட்டுப்படுத்தும் பலம் நம்மிடம் இருந்தும் அது பாவிக்கப்படவில்லை; என்றால் அதற்குக் காரணமான நம்மவர்களை விட்டுவிட்டு நல்லாட்சியைக் குறைகூறி மோசமான ஆட்சியென்று தூக்கிவீசப்பட்ட மஹிந்தவின் பக்கம் நகர்வது அறிவுடமையா?

சிலவேளை, மஹிந்தவின் தரப்பிலிருந்து கோத்தபாய அப்பதவிக்கு வந்தால் நிலைமை என்ன ஆகும்? போன்றவை சிந்திக்கவேண்டிய கேள்விகள்.

அதேநேரம், ஜனாதிபதிப் பதவிமுறை ஆகக்குறைந்தது ஐந்துவருடங்கள் அவஸ்த்தைப்பட்டபின்னாவது ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சிறுபான்மைகளுக்கு வழங்குகின்றதே! என்ற கூற்றும் எப்போதும் நிதர்சனமான உண்மையா? என்பதும் புள்ளிவிபர ரீதியில் ஆரயப்படவேண்டும்.

சுருங்கக்கூறின் ஓர் அறிவு ரீதியான, புள்ளிவிபர ரீதியான, அதாவது விஞ்ஞான ரீதியான ஆய்வுதேவை:
அந்த ஆய்வு பின்வரும் தலைப்புகளின்கீழ் செய்யப்பட வேண்டும்.
(1) சிறுபான்மையின் தயவு இல்லாமல் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட முடியாது; என்பது எப்பொழுதும் நிதர்சனமான உண்மையா?
(2) அவ்வாறு தெரிசெய்யப்பட்டார் என்பதற்காக அவர் எப்போதும் சிறுபான்மைக்கு சாதகமானவராக இருப்பாரா?
(3) சிறுபான்மையின் ஆதரவில்லாமல் அல்லது சிறுபான்மைகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பெரும்பான்மை சமூகத்தால் அவர் தெரிவு செய்யப்பட்டால் சிறுபான்மைகளின் நிலையென்ன? அவ்வாறு தெரிவு செய்யப்படுவது சாத்தியமே இல்லை; எனக்கூற முடியுமா?
(4) ஜனாதிபதிப் பதவியின் பாதக போக்கைக் கட்டுப்படுத்தும் பலம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அது எப்போதும் இருக்கின்றதா?
(5) அவ்வாறு இருந்தால் சிறுபான்மைக் கட்சிகள் அவற்றைப் பாவித்திருக்கின்றனவா?
(6) அவ்வாறான ஒரு பலம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு இருந்தால் அப்பலத்தை பாதகமான ஜனாதிபதியின் போக்கைக் கட்டுப்படுத்தப் பாவிப்பதைவிட, அப்பதவி ஒழிக்கப்பட்ட நிலையில் அதை சமூகத்திற்கான உரிமை, ஏனைய விடயங்களை அடைவதற்கு பாவிக்க முடியாதா?

இன்ஷாஅல்லாஹ், இவை தொடர்பாக அடுத்த தொடர்களில் ஆராய்வோம்.

மேலெழுந்த வாரியாக விடயங்களைப் பார்த்துவிட்டு அல்லது நுனிப்புல் மேய்ந்துவிட்டு சமூகத்தின் தலைவிதியையே கேள்விக்குறியாக்கக்கூடிய விடயங்களில் நாம் தீர்மானம் எடுக்க முடியாது.

ஆழமாக அலசி ஆராய்ந்து முடிவுகள் எடுப்போம். நம் கட்சிகளையும் எடுக்கத் தூண்டுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -