கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை முன்கூட்டியே தயார் நிலையில் உள்ளது விளங்குகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவருடைய அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு கூறினார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:
வட மாகாண சபை இன்னமும் கலைக்கப்படவில்லை. ஆனால் அதன் அடுத்த முதலமைச்சர் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஆராய்ந்து வருகின்றது.அது குறித்து ஊடகங்களுக்கு பிரஸ்தாபிக்கவும் செய்கின்றது. ஆனால் கலை க்கப்பட்டு உள்ள கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் குறித்து அது கிஞ்சித்தும் சிந்திப்பதாக தெரியவில்லை. அதன் அர்த்தம் இம்முறையும் கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்து கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்முடிவு எடுத்து விட்டனர் என்பதாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து அறிய இம்மாகாணத்தை சேர்ந்த தமிழ் மக்கள் பேராவலாக உள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? என்பதை சம்பந்தன் ஐயா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆயினும் அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்றே கொள்ள வேண்டி உள்ளது.