நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் பல பாடசாலைகள் இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ள இதேவேளை நவீன கட்டிடங்களையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் இன்னும் சில பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்வி கற்க வேண்டிய துர்பார்க்கிய நிலையில் பாடசாலை கட்டிடங்கள் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 2, கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 6 தொடக்கம் 8 வரையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கட்டிடம் அதற்கு இன்று சான்று பகிர்கின்றது.
இப்பாடசாலையில் 1 தொடக்கம் 12 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. சுமார் 550 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த ஏனைய வகுப்புகளின் கட்டிடங்கள் ஓரளவு சீராக இருந்தாலும், மேற்படி தரம் 6 தொடக்கம் 8 வரையிலான வகுப்புகளின் கட்டிடங்கள் கட்டப்பட்ட காலத்திலிருந்து எவ்வித அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையில் இட வசதி இல்லாமல் கற்பதில் மாணவர்கள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று இலங்கையில் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருகின்ற போதிலும் இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரம் குறைந்தே காணப்படுகின்றது. இப்பாடசாலையில் வசதியற்ற தோட்டப்புற மாணவர்களே கல்வி கற்கின்றனர்.
இப்பாடசாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமே அதிகமாக காணப்படுகின்றது. இக்கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுடன், மழைக்காலங்களில் கூரை தகடுகள் அள்ளுண்டு போயுள்ள நிலையிலும், அதனை மீண்டும் சீர் செய்தாலும், கட்டிடத்ததை பாவிக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.
கட்டிடத்தில் போடப்பட்டுள்ள கூரை தகடுகள் பல வருடம் பழமை வாய்ந்ததன் காரணமாக ஓட்டைகள் காணப்படுகின்றது. மாணவர்கள் மழை காலங்களில் உட்கார்ந்து படிப்பதற்கு கூட முடியாமல் மழை நீர் வடிவதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதேவேளை, பாடசாலையில் அதிக மாணவர்கள் கல்வி கற்பதனால் தளபாட வசதிகளும், மிகவும் குறைவாக உள்ளதோடு, இருக்கின்ற தளபாடங்களும் சேதமடைந்த நிலையில் இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
மாணவர்களின் இட வசதியை நிவர்த்தி செய்யும் பொருட்டு தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தோட்டத்தில் உள்ள பொது சனசமூக நிலையத்தை பெற்று வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது போதிய வசதிகளை கொண்டதாக இல்லை.
தரையில் அமர்ந்து கல்வி கற்கும் துயரமான நிலையும் இப்பாடசாலையில் இன்றும் தொடர்கின்றது.
பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக கல்வி அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் மூலம் தெரிவித்தும், நேரடியாக சந்தித்து கலந்துரையாடியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரனிடம் கேட்டபொழுது, பாடசாலையின் அதிபர் நிலவும் குறைபாடு சம்மந்தமாக என்னிடம் முறையிட்டிருந்தார். நான் உடனடியாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன். பாடசாலையின் திருத்த பணிகள் மற்றும் அபிவிருத்திகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.