உலமா கட்சியும் அஷ்ரப் காங்கிரசும் முஸ்லிம் எம் பீக்களிடம் கூட்டாக கோரிக்கை.
இலங்கையின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கவனத்திற்கு.அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கையில் யுத்தம் முடிவுற்று சகல இனங்களும் ஒற்றுமையாய் வாழ்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் தேவை என்று ஒரு சிலர் கோரிக்கை விடுப்பதை நாம் அறிவோம்.
இது முழு முஸ்லிம் சமூகத்தினதும் கோரிக்கை அல்ல, மாறாக ஐரோப்பிய நாடுகளின் கைக்கூலிகளாக உள்ள சிலரின் கோரிக்கையாகும்.
1952ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை மேற்படி முஸ்லிம் திருமண சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் சமூகம் தனது விவாகம் மற்றும் விவாகரத்து விடயங்களை பாரிய பிரச்சினைகள் இன்றி இலகுவாக கையாண்டு வருகிறது. எமது முஸ்லிம் அரசியல் மூதாதையர் பாரிய பல முயற்சிகள் செய்து இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த உரிமையை நிலைநாட்டியுள்ளார்கள். இதற்கு அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துழைத்துள்ளார்கள்.
நாட்டில் சிங்கள மக்களுக்கென கன்டிய திருமண சட்டம் உள்ளது, தமிழ் மக்களின் யாழ்ப்பாண திருமண சட்டம் உள்ளது. இவற்றில் யாரும் திருத்தம் தேவை என கூறாத நிலையில் முஸ்லிம் திருமண சட்டத்தை மட்டும் இலக்கு வைப்பதன் மூலம் மேலைத்தேய நாடுகளின் சதி இங்கு இருப்பதை நாம் காணலாம்.
மேற்படி திருமண திருத்த சட்டத்தில் திருத்தம் வேண்டுமா என ஆராய கடந்த ஆட்சியில் 2009ம் ஆண்டு அரசால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனாலும் எத்தகைய திருத்தத்தையும் செய்ய இடமளிக்க முடியாது என நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததை தொடர்ந்து இது விடயத்தை அவர் கைவிட்டிருந்தார். இதற்காக நாம் அவரை இந்த இடத்தில் பெரிதும் பாராட்டுகிறோம்.
இந்த அரசாங்கம் வந்தது முதல் இந்த சதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் கைவைப்பதன் மூலம் எதிர் காலத்தில் இது முற்றாக ஒழிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். முஸ்லிம்களுக்கென தனிச்சட்டம் தேவையில்லை என்றும் பொது சட்டமே தேவை என சில இனவாத ஹாமதுருமார் பகிரங்கமாக பேசும் நிலையில் நாம் இப்போது ஒரு திருத்தத்துக்கு வழி செய்தாலும் நாளை இன்னொரு திருத்தத்தை இனவாதிகள் முன் வைத்து 2018ல் திருத்தினீர்கள்தானே இப்போது ஏன் திருத்த முடியாது என கேட்டால் நாம் பதில் சொல்ல முடியாது போய் விடும்.
இலங்கை முஸ்லிம்களின் இப்போதைய பிரச்சினை என்பது பெண்கள் சிறு வயதில் திருமணம் முடிப்பதல்ல, மாறாக 30 வயது கடந்தும் திருமணம் முடிக்காத முதிர் கன்னி பிரச்சினையே பாரதூரமாக உள்ளது. இந்தப்பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமோ, பெண் உரிமை பேசுவோரோ, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. இதனை உலமா சபையும் உலமா கட்சியும் பேசி முடிவுக்கு வரலாம் என்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். இதில் உலமா அல்லாதவர்கள் கைவைக்க நல்லாட்சி அரசு அனுமதியளிக்க கூடாது என்பதை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
முஸ்லிம் தனியார் திருமண சட்டம் என்பது இறைவன் வழங்கிய சட்டமாகும். இதில் கைவைக்க எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இடமளித்தாலும் அவர் இறை தண்டனைக்குள்ளாவார் என்பதை நாம் எச்சரிப்பதுடன் எதிர் கால சந்ததியும் சாபமிடும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறோம்.
ஆகவே மேற்படி திருத்த அறிக்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு வரும்போது இதனை அவர்கள் முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்றத்துக்கு சொல்ல வேண்டும் என நாம் உங்களை அன்பாகவும் வினயமாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
சுமார் 200 வருடங்களாக இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவித்துவரும் மேற்படி முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்படுவதன் மூலம் உங்களது வாழ்நாளில் இது களங்கப்படுத்தப்பட்டது என்ற அவப்பெயரை நீங்கள் தவிர்ந்து கொள்ளும்படியும் நாம் கேட்பதுடன் இது சம்பந்தமான முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் அறிக்கைகளை தள்ளுபடி செய்து அதற்கான குழுவையும் அரசு ரத்து செய்யவேண்டும் எனவும் அரசுக்கு சொல்லும்படி சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அள்ளாஹ்வுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி,
தலைவர், உலமா கட்சி.
அல்ஹாஜ் எஸ். சுபைதீன்
தலைவர்
அஷ்ரப் காங்கிரஸ்
22.08.2018