- பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பைஸர் முஸ்தபா-
நபி இப்றாஹீம் (அலை), நபி இஸ்மாயீல் ( அலை) ஆகியோர்களது தியாகங்களை நினைவு கூர்ந்து, இவர்களின் வாழ்வியல் அம்சங்கள் பற்றி, அல்லாஹ் நமக்கு அருளியுள்ளவற்றைச் சீர் தூக்கிப் பார்த்து, அல்லாஹ்வுக்காக நாம் எதையும், எப்பொழுதும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதற்கு, இன்றைய பெருநாள் தினத்தில் முயற்சிப்போமாக என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மகத்துவமிக்க ஹஜ்ஜுப் பெருநாளை நம் நாட்டு உடன் பிறப்புக்களும், உலகெங்கும் பறந்து வாழும் முஸ்லிம் உம்மத்துக்களும் தியாக உணர்வுகளோடு மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, கட்டுப்பட்டு, அவனுடைய உயர் சோதனையில் வெற்றிபெற்ற ஒரு குடும்பத்தின் தியாக உணர்வுகளை, இன்றைய பெருநாள் நமக்குப் படிப்பினையாகத் தந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பினைகளையும், தத்துவங்களையும் கருத்திற்கொண்டு, நம் முன்னோர்கள் போல் இத்தியாகம் நம்மால் நினைவு கூறப்படவேண்டிய ஒன்றாகும். கால வெள்ளத்தால் அழியாத தியாக வரலாற்று நிகழ்ச்சியை நினைவு படுத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய நன்நாளாகத் திகழும் இன்றைய பெருநாள் தினத்தில், சமூகத்தைச் சீர்ப்படுத்த, எந்த விதமான தியாகங்களையும் மேற்கொள்வதற்கு எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்றைய பெருநாள் சிறப்பு நன் நாளில், மனித குலத்தவர் வாழ்வில் தியாக உணர்வு, மென்மேலும் அதிகரிப்பதற்கு, இன்றைய பெருநாளில் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க வேண்டும்.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையின் பூர்த்தி விழாவாக அமைந்துள்ள ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நாம், அதன் தத்துவங்களையும், மகிமைகளையும் அறிந்து, எமது வாழ்க்கையில் அதன் படிப்பினைகளை உணர்ந்து நடப்போமாக! அத்துடன், இப்பெருநாளை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்று, இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்ட இச்சிறப்பு நன்நாளில் முனைவோமாக!
நமது நாட்டில் இவ்வாறான தினங்களை, சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் கொண்டாட முடியாத வரலாறு ஒன்று இருந்தது. அவ்வாறான கறை படிந்த அத்தியாயம் நீங்கி, இன்று நாம் இவ்வாறான பெருநாட்களை வெகு சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ, நல்லாட்சி அரசு நமக்கு பாதை அமைத்துத் தந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம், மூன்று வருடங்களைக் கடந்து, நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இத்தகு சந்தர்ப்பத்தில், புனித ஹஜ்ஜுப் பெருநாளை, சகல முஸ்லிம்களும் மிகச் சிறப்புறக் கொண்டாடி மகிழ, எனது ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை, உளமாறத் தெரிவித்துக் கொள்கின்றேன்.