சுஐப் எம்.காசிம்
அகிலம் படைத் தாளும் அல்லாஹ் பெரிய வனே
அருளாளன் அன்புடை யோன் அவனிவாழ் மாந்த ரெல்லாம்
சிறப்பான வாழ்வு கண்டு தீமை களைந் தொழுகத்
தேர்ந்தான் இஸ்லாத்தை திரு நிறைந்த சன்மார்க்கம்!
“கலிமா” பொருளு ணர்ந்து கண்ணிய னாம் அல்லாஹ்வை
அனுதின முமே “தொழுது” அரிய “சகாத்” அளித்து
புனித மிகும் ரமழானில் பொறுமையுடன் “நோன்பிருந்து”
இதமாக “ஹஜ்ஜு” செய்ய ஏவினான் வல்ல இறை!
“ஹஜ்உம்ரா செய்வ துங்கள் கடமை” எனும் இறையோனின்
கட்டளை யைத் திரு மறையில் காணுகிறோம் தெளிவாக
ஹஜ் கடமை செய்யாது காலம் கடத்து வதால்
கஷ்ட துன்பம் நீங்காது கைசேதம் கைசேதம்!
உடற் பலமும் பண பலமும் உண்மையிலே பெற் றிருந்தும்
ஒவ்வாத காரணங்கள் உரைத்து ஹஜ்ஜுக் கடமையினை
மடைமை யினால் மறந்துலக மாயையிலே மூழ்கி அந்தக்
கடமை யினைச் செய்யாது காலம் கடத்துவ தோ?!
ஹஜ் கடமை செய்யுமுன் நாம் கடைப்பிடிப்போம் முன்கடமை
தொழுகை களைப் பேணித் தொழுவோம் சகாத் அளிப்போம்
உளமுவந்து அமல் செய்வோம் ரமழானில் நோன் பிருந்து
ஹலாலான தேட் டத்தில் ஹஜ் கடமை செய்திடுவோம்!
வாழ்விலே நாம் செய்த பாவங் களை நினைந்து
வல்ல இறைவ னிடம் “தௌபா” இறைஞ் சிடுவோம்
நல்ல “தக்வா” வுடனே நன்மை பெருக்கி நிதம்
நாதர் நபி பேணிவந்த நல்வழியைப் பின் தொடர்வோம்!
புனித மிகும் “கஃபா” வும் புவிக்கோர் அருட்கொடையாம்
இனிதாய் அதில் வணக்கம் புரிவதொரு பாக்கியம் தான்
ஹஜ் கடமை செய்வோர்க்குக் கடன் வறுமை நோய்பிணியை
இல்லா தொழிக்கும் இறை கருணையினை நாடி நிற்போம்!
செய்யு மொரு நற்செயலால் நன்மை ஒன்று கிட்டுமென்றால்
ஹறம் ஷரிபில் அச்செயலுக் கோரி லட்சம் நன்மை களாம்
ஹறத் தமர்ந்து மனமுருகிக் கையேந்தும் பிரார்த் தனையைக்
கருணை மிகும் அல்லாஹ் கபுல் செய்வான் என்றறிவோம்!
“மஸ்ஜிதுன் நபவி” எங்கள் மாநபியின் புனித பள்ளி
“மதீனாவின் ஹறம்” அதிலே மனங்கொண்டு தொழுதிடுவோம்
வள்ளல் நபி களது ரவ்லாவைக் காண்பது நம்
வாழ் நாளிலே கிடைக்கும் பேரதிர்ஷ்டம் என்றுணர்வோம்!
மக்கள் மனைவி மற்றும் சுற்றம் சுகம்விட்டு
மக்காவை நாடவைத்த மாஇறைக்கு நன்றி சொல்வோம்
எக்கால மும் தீமை எண்ணாத புனிதர்களாய்
சொர்க்கத்தின் சுகம் வேண்டி ஹஜ்ஜை நிறைவு செய்வோம்!