க.கிஷாந்தன்-
அமெரிக்கா டொலரின் உயர்வும் ரூபாவின் விலை வீழ்ச்சியும் தொடர்ந்தும் தாக்கத்தை உருவாக்குமேயானால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் கமிட்டி அமைத்து இது தொடர்பாக ஆராயப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவு அமைச்சர் ரவீந்திர சமரவீர அட்டனில் தெரிவித்தார்.
அட்டனில் 8 கோடி ரூபா செலவில் மூன்று மாடிகளை கொண்ட தொழில் திணைக்கள கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.09.2018 அன்று இடம்பெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அமெரிக்கா மக்களுக்கு இரண்டு உத்திரவாதங்களை வழங்கியிருந்தார். அமெரிக்கா பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா பிரஜைகளாக அந்தஸ்த்து பெற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளோரை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதில் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்ற நிலை இருக்கும் இந்த நிலையில் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக டொலரின் விலை உயர்வு அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா 13 வீதத்தாலும், தென்கொரியா 9 வீதத்தாலும்1. அவுஸ்திரேலியா 8 வீதத்தாலும் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றது.
ஆனால் இலங்கையிலும் டொலரின் உயர்வினால் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக பாராளுமன்றத்தில் கமிட்டி ஒன்றை நியமித்து ஆராயப்படவுள்ளது.
நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக போட்டியிடுவாரா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கே்ளவிக்கு பதிலளித்த அவர்,
இன்றைய சட்ட பிரகாரம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என தெளிவளித்த அவர், இந்தியாவுக்கு சென்ற முன்னால் ஜனாதிபதி குடும்ப உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதாகவும் தெரிவித்துள்ளார் என தெரிவித்த அமைச்சர்.
மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இன்றி ஆட்சியமைக்க முடியாது. ஆகையால் குடும்ப உறுப்பினர்கள் எவரையாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பார் எனவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தீடிரென ஒருவரை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வைத்தது போல் இம்முறையும் ஒருவரை நாம் போட்டியிட வைப்போம் என்றார்.