ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!


ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-


சியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ - எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவையடுத்து, மைல்கல் நிகழ்வாக இந்த அமர்வு இலங்கையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு இலங்கையின் மிக உயர்ந்த சிறிய நடுத்தர தொழில்முனைவோரான வணிக அபிவிருத்தி முகவராக இயங்கும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினரை (NEDA) இலக்கு வைத்திருப்பது வரப்பிரசாதம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், 2018ஆம் ஆண்டுக்கான ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு தொடர்பாக இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றின் போதே, அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தொழில்முனைவோர் வளர்ச்சி என்பது கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நோக்கத்தின் ஒரு பாரிய தூணாகும். இலங்கையின் தொழில் முனைவோருக்கான யுனெஸ்கோ-ஆசியா-பசுபிக் நிகழ்ச்சியின் புதுமைக் கல்வி மேம்பாட்டுக்கான தொடர், எமது தொழில் முயற்சியாளர்களுக்கும் மற்றும் சிறிய வியாபாரங்களுக்கும் ஒரு மைல்கல் ஆகும். எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார வளர்ச்சி உட்பட ஏற்றுமதி விரிவாக்கத்திற்காக தொழில்முனைவோரை உலக சந்தையில் இணைப்பதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளார்.

ஒக்டோபர் 09 ஆம் திகதி திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ள யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) அமைப்பினரின் தொழில்முனைவோர் கல்வி தொடர் அமர்வில் ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறிய வர்த்தக தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் இளைஞர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். மூன்று நாள் (அக்டோபர் 9-11) கொண்ட இந்த தொடர் அமர்வின் இறுதிநாள் நிகழ்வு கொழும்பில் நடைபெறும். யுனெஸ்கோ - எபீட் (UNESCO-APEID) அமைப்பினரின் தொழில்முனைவோர் கல்வி தொடர் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது முதல் தடவையாக இலங்கை தொழில்முனைவோரை மையமாகக் கொண்டு நடத்தப்படுவது ஒரு மைல்கல் நிகழ்வாகும். இதன் 06 வது அமர்வு, 2017ஆம் ஆண்டு அக்டோபரில் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது. “ஆசியாவின், கிழக்கு மற்றும் தெற்காசியாவில் பரஸ்பர அங்கீகாரம் மற்றும் தகுதிகளை நோக்கி ஒரு பொருத்தமான மற்றும் புதுமையான கல்வியினை தொழில்முனைவோருக்கு வடிவமைத்தல்" என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. யுனெஸ்கோ - எபீட் (UNESCO-APEID) தொழில்முனைவோர் கல்வித் தொடர் அமர்வானது அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனியார் துறை, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு ஆதரவு வழங்குவதோடு, பங்குதாரர்களிடையே தொழில்முனைவோர் கல்வி வலைப்பின்னலை ஒருங்கிணைப்பது ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

இத்தொடரின் முதலாவது மற்றும் இரண்டாவது அமர்வுகள் (ஜூன் 2012 மற்றும் மார்ச் 2013 இல்) சீனா - ஹாங்க்ஜோவில் நடைபெற்றன அதன் பின்னர், கோலாலம்பூர் (டிசம்பர் 2013), பாங்கொக் (பிப்ரவரி 2015 மற்றும் அக்டோபர் 2015), ஜகார்த்தா மற்றும் பாண்டுங் (செப்டம்பர் 2016), மணிலாவில் (அக்டோபர் 2017) ஆறாவது அமர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோவின் இந்த முன்னோடித் திட்டத்தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பங்களிப்பு பெருமைக்குரியது. தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது எனது அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். எமது அரசாங்கமானது தொழில்முனைவோரை உலக சந்தையில் நெருக்கமான இணைப்பிற்காக செயற்படுகின்ற பொருளாதாரத் துறையாக காணப்படுகின்ற நிலையில், எமது தொழில்முனைவோர்க்கும், சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும் இந்த அமர்வு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகின்றேன்.

இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்க்கான தொழில் ரீதியான கல்வியை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் புதிய பொருளாதார மூலோபாயத்திற்கான வழிகளை இவ் முன்னோடியான யுனெஸ்கோ - எபீட் (UNESCO-APEID) அமர்வு நிறைவேற்றும் என்பதை எதிர்பார்க்கின்றேன்.

2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தால் இலங்கையின் மிகப்பெரிய தொழில்முனைவோர்க்கான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை நிறுவப்பட்டது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அபிவிருத்தி, விரிவாக்கம் ஆகியவற்றை தூண்டுகிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை ஊடுருவக்கூடிய, திறனுள்ள உள்நாட்டு நிறுவனங்களை சர்வதேசமயமாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களினை, இலங்கைக்கு வெளியே நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளையும் இச்சபை ஊக்குவிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -