பொருளாதார அபிவிருத்தியினூடாக இனங்களுக்கிடையே நிலைபேறான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உயர் அதிகாரிகளை ஆசிய மன்ற பிரதிநிதிகள் அண்மையில் (28) திருகோணமலை சுற்றுலா விடுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபய குணவர்தன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆசிய மன்றத்தின் பிரதம பணிப்பாளர் டாக்டர் கோபகுமார் தம்பி, கிழக்கு மாகாண முதலைமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், திட்டமிடலுக்கான பிரதிப் பிரதம செயலாளர் என்.தமிழ்செல்வன், ஆசிய மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த நிகழ்ச்சித் திட்டதின் நோக்கம் குறித்து ஆசிய மன்றத்தின் பிரதம பணிப்பாளர் டாக்டர் கோபகுமார் தம்பி தெளிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உயர் அதிகாரிகள் கூடிய அவதானம் செலுத்தியதுடன் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட சில பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக ஆசிய மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.