கோரக்கர் விழுதுகள் சங்கம விழாவில் பேராசிரியர் மௌனகுரு.
காரைதீவு நிருபர் சகா-தமிழர் பண்பாடுகள் கலாசாரங்கள் அவரவர் வீட்டிலிருந்தே வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழர்களின் அடையாளம் தொடர்ந்து பேணிப்பாதுகாக்கப்படும்.
இவ்வாறு கிழக்குப்பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.மௌனகுரு தெரிவித்தார்.
சம்மாந்துறை கோரக்கர் பல்கலைக்கழக மாணவர் சமுகசேவை ஒன்றியம் 'விழுதுகளின் சங்கமம்' என்ற நிகழ்வை நேற்றுமுன்தினம் (28) ஞாயிற்றுக்கிழமை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடாத்தியது.
ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் தலைமையில் 'வித்திட்ட முற்றத்தில் வேர்களின் எழுச்சி' என்ற மகுடத்தின்கீழ் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதமஅதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.மௌனகுரு கலந்துகொண்டுரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கௌரவ அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா(சம்மாந்துறை) பி.பரமதயாளன்(திருக்கோவில்) கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாசன் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் சம்மாந்துறை பிரதேசசபையின் உதவித்தவிசாளர் வி.ஜெயச்சந்திரன் சம்மாந்துறை தேசியபாடசாலை அதிபர் முத்து இஸ்மாயில் ஆலயத்தலைவர் பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர். அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டுக் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
நாட்டுப்புறக்கலைகளுக்குப் பெயர்போன இந்த கோரக்கர் மண்ணைச் சேர்ந்த வீ.ஆனந்தன் என்ற பெரும் ஆளுமையை நினைத்துப்பார்க்கிறேன். அவரது வழித்தோன்றல்களான இங்கு விஞ்ஞானி வினோஜ்குமார் தினேஸ்குமார் போன்ற பல வித்துக்களைக்காண்கிறேன். மேலும் ஆலவிருட்சமாக வளர வாழ்த்துகிறேன்.
மிகவும் அருமையாகவிருந்தது இவ்விழா. நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்களிடத்தே தன்னம்பிக்கை உருவாகும். என்றார்.
கிழக்குப்பல்கலைக்கழக மாணவனாகவிருந்த சோ.தினேஸ்குமார் எழுதிய 'ஜக்கம்மா' என்ற ஆய்வுநூல் பேராசிரியர் மௌனகுருவால் வெளியிட்டு வைக்கப்பட்டது. விமர்சனஉரையை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாசன் நிகழ்த்தினார்.
அதேவேளை 'ஈழத்தின் இளம் கண்டுபிடிப்பாளன்' எனும் ஆவணப்படம் காணொளியில் அங்கு காண்பிக்;கப்பட்டது.
ஈழத்தின் இளம் கண்டுபிடிப்பாளன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் பேராசிரியர் மௌனகுருவால் பொன்னாடை போர்த்தப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழக விபுலாநந்த அழகியல்கற்கை நிறுவக மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சபையோரை பிரமிப்பிலாழ்த்தியது.
கூடவே சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது. வறிய மாணவர்களுக்கான கற்றலுபகரணங்கள் வழங்கப்பட்டன.