பலரும் ஆச்சரியமாகப்பேசும் தலைவராக, தூரநோக்கோடு எதனையும் திட்டமிட்டு முன்னெடுக்கும் ஒருவராக பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் திகழ்ந்தார்கள். அவரின் ஆளுமைகளும், சாதனைகளையும் விரும்பியும் விரும்பாமலும் தங்களின் அரசியல் நலனை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர் உருவாக்கிய கட்சியை அழிக்கத் துடிப்பவர்களும் வாய் நிறைய பப் சுவதை நாம் பார்க்கலாம்.
மர்ஹும் அஷ்ரஃப் தூரநோக்கோடு தனக்குப்பிறகு இந்த சமூகத்திற்கு தலைமை தாங்க தனது பாசறையில் உருவாக்கிய தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமை ஏற்றுக்கொள்ளாது, தங்களின் சுயநலன்களுக்காக மர்ஹும் அஷ்ர ஃபின் ஆளுமை, தூரநோக்கை கேள்விக்குட்படுத்துவதை நாம் பார்க்கலாம்.
அதாவது, தலைவர் ரவூப் ஹக்கீமை குறை சொல்வதனூடாக மறைமுகமாக மர்ஹும் அஷ்ரபை குறை காண்பதகாவே சொல்லத் தோன்றுகிறது. இவ்வாறு றவூப் ஹக்கீமை குறை காண்பவர்களுக்கும், கிழக்கிற்கு தலைமைத்துவம் கேட்பவர்களுக்கும் அன்று மர்ஹும் தலைவர் சொன்ன உபதேசம் என்னவென்று பின்வரும் சம்பவத்தை உணர்த்துகிறது.
"அஷ்ரஃப் அவர்கள் ஒருமுறை தனக்கு நெருக்கமான ஒரு போராளியுடன் புத்தளம் நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தன.
அந்த நேரத்தில் கூடச் சென்ற போராளி இது தொடர்பாக அவருடன் உரையாடிக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் போராளி வினவினார் 'சேர் நமது சமூகத்துக்காக உலகின் மிக ஆபத்தான பேர்வழிகளையெல்லாம் நீங்கள் பகைத்துக் கொண்டுள்ளீர்கள். அல்லாஹ் உங்கள் உயிரை மேலும் மேலும் பாதுகாத்து இந்தப் போராட்டத்தின் ஜீவ நாடியை ஆபத்துக்கள் இன்றிக் காப்பாற்ற வேண்டும்.
உங்கள் அருமையான முகத்தைப் பார்த்து இந்தக் கேள்வியை நான் கேட்கக் கூடாது. எனினும் நீங்கள் தந்த பயிற்சி எனக்கு அதற்கான தைரியத்தைத் தந்துள்ளது என்று கூறியவராக அவர் பின்வரும் வினாவை அஷ்ரஃபிடம் எழுப்பினார்.
இந்தப் பயங்கரமான எதிரிகளால் உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் நமது சமூகமானது நட்டாற்றில் விடப்பட்டு விடுமே என்ற தன் நியாயமான ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
அதற்கு தலைவர் அஷ்ரஃப் பதிலளிக்கையில் அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதற்காக நமது சமூகம் சார்ந்த அபிலாஷைகளை பிரஸ்தாபிக்க வேண்டிய இடத்தில் பிரஸ்தாபிக்க வேண்டிய தருணத்தில் பிரஸ்தாபிக்காமல் விட்டு விடுவதா? எனக்கு அவ்வாறு அவர்களால் ஆபத்தொன்றும் நிகழப் போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.
ஆனால், எல்லாவற்றையும் மீறி எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் விட்ட இடத்தில் இருந்து இந்த சமூகத்தை வழி நடாத்திச் செல்தற்கான பயிற்சியையும் தைரியத்தையும் முதிர்ச்சியையும் ரவூப் ஹக்கீமில் நான் ஏற்படுத்தியுள்ளேன் என்று அஷ்ரஃப் அவரிடம் கூற அதற்கு மீண்டும் அந்தப் போராளி அவர் சின்னப் பொடியனல்லவா அவரை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என பதில் வினாத்தொடுக்க அஷ்ரஃப் பின் வருமாறு கூறினார்.
நாம் எல்லோரும் சேர்ந்து கட்சியை ஆரம்பித்தபோது தலைமைப் பதவியை எனக்குத் தந்தீர்கள். அப்போது நாற்பது வயதையும் நான் தாண்டவில்லை. நமது எதிரிகளான சீனியர் மார் ' சிறு பிள்ளை செய்யும் வேளாண்மை விளைந்தும் பயன் தராது' என்று நம்மைக் கேலி செய்யவில்லையா? எனக்கூறி அவர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்தான்.
தீவு அடங்கலிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரியத் தலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு இந்த மட்டக்களப்பானை தங்களின் அரசியல் தலைமையாக வரலாற்றில் முதற் தடவையாக ஏற்றுக் கொள்கையில் நம்மவர் மட்டும் பிரதேசவாதத்தின் அடிப்படையில் சிந்திக்க எவ்வாறு மனம் வருகின்றது? என்று அஷ்ரஃப் கூறினார்."
(ஷப்நம்).
எனவே, பெருந்தலைவரை நேசிக்கிறோம் என்றும் அவரின் வழியில் அரசியல் செய்வதாகவும் தங்களைக்காட்டி மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த முற்படுபவர்களும், வரலாறு தெரியாது தலைவர் ரவூப் ஹக்கீமை எதிர்ப்பவர்களும் எந்தச்சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் பொருத்தமானவர் என்பதை பெருந்தலைவர் உணர்ந்திருந்தார் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்.