இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் கட்சி போன்ற கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கு முன்பிருந்ததை விட பின்னர் மூன்று இனங்களுக்குள்ளும் பாரிய இன மோதல்கள் உருவாகியதை காண்கிறோம். இதற்கு எண்ணை ஊற்றி வளர்த்தவர்கள் இத்தகைய கட்சிகளே.
தமிழர்களையும் சிங்களவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வது பின்னர் அவர்களுடன் ஆட்சியில் பங்கெடுத்து நாங்கள்தான் தீர்மானிக்கும் சக்தி என கூறி ஏனைய இன மக்களை உசுப்பேத்துவதே இக்கட்சிகளின் வழமையாகும்
முஸ்லிம் காங்கிரசின் இது போன்ற கருத்துக்களால் சிங்களவரின் ஆட்சியை முஸ்லிம்கள் தீர்மானிக்க விட முடியாது என கூறியே ஹெல உறுமய போன்ற கட்சிகள் வளர்ந்தன.
பின்னர் அதே ஹெல உறுமய போன்ற கட்சிகளின் அரசில் இக்கட்சிகளும் பங்கெடுத்து சுகம் அனுபவித்தன. ஆனால் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடி வாங்கினர்.
நல்லாட்சி அரசாங்கம் வந்த போதும் மனோ கணேசன் போன்றோர் இவ்வாறுதான் கூறினர். உண்மையில் ஐ தே க தலைமையிலான நல்லாட்சியை கொண்டு வந்ததில் பிரதான பங்கு சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு. ஆனால் இப்பெருமையால் தமிழ் முஸ்லிம் மக்கள் பெற்ற விசேட நன்மை அல்லது உரிமைகளை மனோ கணேசனால் குறிப்பிட முடியுமா?
இந்த ஆட்சியில் மஹிந்த ஆட்சியை விட மிக மோசமாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிந்த பின் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு இந்த ஆட்சியில் சிதைக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளை டயஸ்போராவும், தமிழ் கூட்டமைப்பும் இந்து இனவாதிகள் அமைப்பும் இணைந்து முன்னெடுத்த போது அதனை ரணில் அரசு கட்டுப்படுத்தாமல் எண்ணை ஊற்றியது. மனோ கணேசன், ஹகீம் போன்றோரின் கட்சிகள் ஒப்பாரி வைத்தனரே தவிர கொஞ்சமேனும் கட்டுப்படுத்தவில்லை.
ஆகவே ரணில் அரசாங்கம் அமைப்பதில் பிரதான சிறுபான்மை கட்சிகளுக்கே பங்குண்டு என கூறும் மனோ கணேசனால் மஹிந்த மைத்திரி கூட்டரசை உருவாக்க சிறுபன்மை கட்சிகளுக்கு பங்குண்டு என்ற வகையில் கருத்து தெரிவிக்க முடியாமல் இருப்பது ஏன்? அப்படியொரு சந்தர்ப்பத்தை ஏன் வழங்கிப்பார்க்க முடியாது?
ஆகவே மனோ கணேசன், ஹக்கீம் போன்றோர் தொடர்ந்தும் ஐ தே கவின் புரோக்கராக இருக்காமலும் சிங்கள இனவாதிகளுக்கு தீன் போடும் உசுப்பேற்றல் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோருகிறது.