-எம்.எஸ்.எஸ்.அமீர் அலி-
எச்.எம்.எம்.பர்ஸான்-மைத்திரிபால சிறிசேன மீண்டு ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்படுகின்றார் அதனால்தான் அவர் அரசியலில் திடீர் மாற்றங்களையும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமித்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் விசேட நிகழ்வொன்று நேற்று (17) சனிக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடாக் கிளை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,
அரசியலில் ஏற்பட்ட குழப்பநிலைகளைத் தொடர்ந்து நாங்கள் ஜனாதிபதியிடம் நேரடியாகப் பேசினோம் அப்போது நாங்கள் அவரிடம் கூறினோம் நீங்கள் ஒரு பாரிய பிழையை செய்துள்ளீர்கள் அது என்ன பிழையென்றால் உங்களுடைய அரசியல் வெற்றிக்கு இந்த சிறுபான்மை கட்சிகளும் அதன் தலைமைகளும் கடுமையாகப் போராடியது அவ்வாறு உங்களுக்கு தோள்கொடுத்த கட்சிகளிடம் இந்த அரசியல் மாற்றம் தொடர்பில் நீங்கள் ஏன் பேசவில்லை நீங்கள் அந்த விடயங்களை கட்சிகளிடம் பொறுப்புத் தந்திருக்க வேண்டும் நாட்டின் பிரதமரோடு ஒத்துப்போக முடியாது அல்லது நாட்டைக் கொள்ளையடிக்கிறார் அல்லது என்னை கொலை செய்யப்பார்க்கிறார் அல்லது அதிகாரத்தைப் பிடுங்கப் பார்க்கின்றார் என்று நீங்கள் கட்சிகளிடம் பொறுப்புத் தந்திருந்தால் நீங்கள் இந்தளவுக்கு கஷ்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அத்தோடு மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமாராக நியமிக்க வேண்டிய நிலவரம் உங்களுக்கு வந்திருக்காது அதனை நாங்கள் மிகவும் இலகுவாக நகர்த்தித் தந்திருப்போம் நீங்களும் விரும்புகின்ற எல்லாக் கட்சிகளும் விரும்புகின்ற ஒரு தலைவனை நாங்கள் கொண்டுவந்து தந்திருப்போம் என்று கூறினோம்.
எனவே மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஏதோவொரு வகையில் மீண்டும் இந்நாட்டுக்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றார் அதனால்தான் மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக்கி தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றுதான் அவர் கனவு காண்கின்றார் என்று எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, சபையின் உறுப்பினர்கள், சட்டத்தரணி எம்.எம்.ராசிக், வைத்தியர் அப்தாப் அமீர் அலி, மற்றும் பள்ளிவாயல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்குடா பகுதிகளிலுள்ள அரசியல் ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.