ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? என்ற சந்தேகத்திற்கு நான் 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழரசுகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
யாழில் தனது இல்லத்தில் இன்று (29) அவசர விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது கருத்தில்
ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என்ற வியாக்கியானத்தை தெளிவாக முன்வைத்தாலும் இன்று வரை தமிழ் ஊடகங்கள் புரிந்து கொள்ளவே இல்லை.மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக இன்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்கர்களும் தமிழிலா உரையாடினார்கள் என்பதை சம்பந்தப்பட்ட ஊடகங்களிடம் கேட்க விரும்புகின்றேன். அவர்கள் சிங்களத்தில் தானே உரையாடினர். அங்கு ஏக்கிய இராட்சிய என்றே பிரதமர் அங்கு கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டார்கள்.
ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இதனை நான் 100 தடவைகளுக்கு மேல் பல தரப்பினருக்கும் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும் என கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்.