கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்ட விசேட கூட்டமொன்று நேற்று (26) புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் ஆரம்பமாகி சூடான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மாலை 6 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது சபை உறுப்பினர்கள் பலர் வரவு செலவுத் திட்டத்திலுள்ள குறைகளை முன்மொழிந்த போதிலும் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கெடுத்த நிலையில் ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதில்ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்த இஸட் ஏ. றஹ்மானின் இடத்துக்கு அக்கட்சியால் நியமிக்கப்பட்ட ஏ.எல்.றபீக் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட சபை அமர்வினை பார்ப்பதற்கு ஏராளமான கல்முனை மாநகர பொதுமக்களும் காரைதீவு, கல்முனை பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெயசிறில் அடங்கலாக அரசியல் முக்கியஸ்தர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய முதல்வர் ஏ.எம். றக்கீப் தனதுரையில்,
இங்குள்ள பிரச்சினைகளை உறுப்பினர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். திண்மக் கழிவகற்றல், வாகனப் பராமரிப்பு, ஊழியர்களுக்கான சம்பளம், தெரு மின் விளக்குகள் பொருத்துதல், வடிகான்கள் அமைத்தல்; பராமரித்தல் இவ்வாாறு பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக 2019 வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 நிரந்தர ஊழியர்கள் மொத்தமாக மாதம் 75,000 ரூபாய்கள் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 20 அமைய ஊழியர்கள் மொத்தமாக 20,000 ரூபாய் சம்பளம் இவ்வாறு இந்தச் செலவுகள் ஏறத்தாழ 1 இலட்சம் ரூபாய் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. இவைகள் இச்சபையின் சோலை வரியிலிருந்து எடுக்கப்படுகின்ற வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படுகின்றது.
எனவேதான், உறுப்பினர்கள் அணைவரும் இணைந்து மக்கள் நலன் பேணும் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றார்