இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியானது. இதனால், அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின.
சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சுனாமி தாக்குதலில் 43 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட பிரேதங்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக உயர்ந்துள்ளது.
இன்று மாலை நிலவரப்படி 373 பேர் உயிரிழந்ததாகவும் 1,459 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முகமையை சேர்ந்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல்போன 128 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவுன் அவர்கள் குறிப்பிட்டனர்.Maalai malar