மோதலொன்றின் அல்லது முரண்பாடொன்றின் பின்னர் இரு தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கிடையே மீண்டும் இணக்கத்தையும் நட்புறவையும் ஏற்படுத்தும் செயன்முறையை சுருக்கமாக மீள்நல்லிணக்கம் எனலாம்.
அந்தவகையில் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னர் மீள்நல்லிணக்க செயற்பாடுகள் பல வழிகளிலும் அரசு மற்றும் அரசசாரா அமைப்புக்களின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் வளப்பகிர்வு மற்றும் கொள்கை உருவாக்கலில் காணப்பட்ட பாகுபாடு காரணமாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையினால் முரண்பட்ட இலங்கையின் இரு பிரதான இனக்குழுமங்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்நல்லிணக்கம் இடம்பெற்று வருகின்றது எனலாம்.
நல்லிணக்கத்தை செயற்படுத்தும் அரசாங்க மற்றும் தனியார் அமைப்புக்கள் இன்று கூடுதலாக பாடசாலை மட்டங்களிலும் பொதுத்துறையிலும் இச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். மேலும் மதங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தல், நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்கின்றன. இருப்பினும் இலங்கையில் சமாதானம் மற்றும் மீள்நல்லிணக்கம் என்பது இதுவரையில் முழுமையாக எட்டப்படவில்லை என்றே குறிப்பிடலாம்.
இலங்கையை பொறுத்தளவில் மோதலுக்கான சூழல் மற்றும் மனித நடத்தைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட மனப்பாங்கு ரீதியான முழுமையான மாற்றங்கள் இதுவரையில் உருவாகவில்லை என்பதே மீள்நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மிகப் பெரும் சவாலாக உள்ளது. மேலும் இலங்கையில் தற்பொழுது காணப்படும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார சிக்கல்கள், அதிகப்படியான சர்வதேச தலையீடுகள், தங்கியிருத்தல் நிலை, கலாசார மற்றும் அபிவிருத்தி காரணிகள் போன்ற பல அம்சங்களும் மீள்நல்லிணக்க செயற்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தடையாக உள்ளன எனலாம்.
இச் செயற்படுகளில் இளைஞர்களின் பங்கு என்பது மிகவும் அவசியமானதாகும். ஆரம்ப காலங்களை விடவும் இன்று இளைஞர்கள் ஓரளவு இச்செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் கூட அதிகமாக நகர்ப்புற இளைஞர்களே இது தொடர்பில் விழிப்புணர்வுடன் உள்ளனர். மாறாக கிராமிய மட்டங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு மீள்நல்லிணக்கம் பற்றிய தெளிவு முழுமையாக காணப்படவில்லை என்பதுடன் வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையில் மீள்நல்லிணக்க செயன்முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் British Council இன் அணுசரணையுடன் Active Citizen நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பானது(International Youth Alliance for Peace) தெற்கு மாகாணம் காலி மாவட்டத்தில் கடந்த வாரம் ஐந்து (05) நாட்கள் 'மீள்நல்லிணக்கம் மற்றும் சமாதானம்' எனும் தலைப்பில் இளைஞர்களுடனான செயலமர்வு ஒன்றினை சிறப்பாக நடாத்தியிருந்தது. இதில் காலி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து இன, மதம், மொழியை (பௌத்தம், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்) சேர்ந்த இளைஞர்கள் முப்பது (30) பேர் கலந்து கொண்டனர்.
முக்கியமாக இதில் 04 இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினரையும் ஒன்றுசேர்ந்து பரஸ்பர புரிந்துணர்வினை ஏற்படுத்தி மீள்நல்லிணக்க செயற்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே இச் செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டது. தெற்கு மாகாணத்தில் நடந்தேறிய இச் செயலமர்வின் சாதகமான விளைவுகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைத்து நல்லிணக்கத்திற்காக வலுவானதொரு இளைஞர் வலையமைப்பை உருவாக்குதலே இதன் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
அந்தவகையில் நடாத்தப்பட்ட இச் செயலமர்வு ஐந்து நாட்களுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இனிவரும் ஒரு வருட காலத்திற்கு நல்லிணக்கம் குறித்த இளைஞர்களின் செயற்திட்ட யோசனைகளும் நடவடிக்கைகளும் பின்தொடரப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இச் செயலர்வில் இளைஞர்களின் மீள்நல்லிணக்கம் குறித்த பொறுப்புக்கள் மற்றும் அவர்களின் உளவியல் ரீதியான கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கையை பொறுத்தளவில் இன்று இளைஞர்களின் தலைமைத்துவம் என்பது அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தப்படல் அவசியமாகும். நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் சமூகப் பொறுப்பு என்பது அத்தியவசியமானதொன்றாகும்.