கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு - 2018 கல்முனை கிறிஸ்த இல்லத்தில் அதன் தலைவர் தானிஸ் றஹ்மதுல்லாஹ் தலைமையில் நேற்று சனிக் கிழமை (22) நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.
இங்கு தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கினை "வுழூ ஸ்கை கெம்பஸ்" முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ஜெ. ராகுலன் நடாத்தி வைத்தார். அத்துடன் இப்பயிற்சி தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவ வான்மையை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் முஹம்மட் நிஸாம் மாயில், தொழிலதிபர், அரசியல் விமர்சகர் எம்.எச்.எம்.இப்றாஹீம், ஆலோசகர் சமூக சேவகர் எஸ்.எல்.ஏ.நிஸார், பிரபல எழுத்தாளரும், நடிகையுமான நவயுகா ராஜ்குமார், "வுழூ ஸ்கை கெம்பஸ்" அலுவலக முகாமையாளர் வி. ரகுராஜன் மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தபா முபாறக் ஆகியோர் உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு விசேட உரையாற்றிய தொழிலதிபர், அரசியல் விமர்சகர், அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இப்றாஹீம் அவர்களால் பங்கு கொண்ட இளைஞர் யுவதிகளிடம் வினா ஒன்று எழுப்பப்பட்டு விடை சொன்ன அதிஸ்டசாலி ஒருவருக்கு ரூபாய் ஐயாயிரம் காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இங்கு கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் நினைவுக் கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.