இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் அம்பாரை மாவட்டத்திற்கு புதிய அரசாங்கத்தில் முழு அமைச்சு வழங்க வேண்டியது புதிய அரசாங்கத்தின் தார்மீக பொறுப்பாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் ஆணி வேர்களாக தொடர்ச்சியாக இருந்து வருவது அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே:
பெருந் தலைவர் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அம்பாரை மாவட்டத்தை மையப்படுத்தியே கட்சியையும் சமூகத்தின் நலன்களையும் பாதுகாத்து வந்தார்.இன்று அவர் இல்லாத நிலையில் சுமார் 18 வருடங்கள் அம்பாரை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருத்தர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில்தான் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் அதிகமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்வதோடு மாவட்ட செயலாளரின் தான் தோன்றித்தனமான இனவாதத்தை கட்டுப்படுத்தி சிறுபான்மை சமூகங்களின் உரிமையை நிலைநாட்ட முடியும்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக படுகொலைக்கு எதிராக துனிந்து நின்று குரல் கொடுத்தவர்களில் பிரதானமானவர்கள் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த எமது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் அணியினரின் பணம் பதவிகளுக்காக சோரம் போகாமல் தன் சமூகத்தின் தன்மானம் காத்தது நின்றவர்கள்,
இது ஒரு புறம் இருக்கத்தக்க முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அம்பாரை மாவட்டத்திற்கு முழு அமைச்சை வழங்கமாட்டார் எனும் குற்றச்சாட்டுக்களை எதிர்த்தரப்பினர் பல வருடங்களாக கூறி வருகின்றனர். இக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கட்சியின் தலைவர் இம்முறை முயற்சி செய்வார் எனும் நம்பிக்கை அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் போராளிகளுக்கு நிறையவே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முழு அமைச்சு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை வைத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
அதே போல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்திற்கு அதிலும் கட்சியின் ஸ்தாபகர் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் பிரதேசமென கருதப்படுகின்ற கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைநகரான கல்முனை மண்ணுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்க வேண்டுமென்பதில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.
தற்போது கல்முனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கல்வியிலும் சரி சமூக சிந்தனையிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றார்.
இவரைப்பற்றிய உயர்வான சிந்தனைகளே மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது.
மக்கள் விரும்பும் தகுதியான ஒருத்தர் அமைச்சராக நியமிக்கப்படும் போது முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமல்ல நமது சமூகமும் பாரிய மாற்றத்தை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
எனவே ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் முஸ்லிம் வாக்காளரைக் கொண்ட அம்பாரை மாவட்டத்திற்கு 18 வருடங்களாக மறுக்கப்பட்டுவந்த முழு அமைச்சை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டிய தார்மீக பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உள்ளது என சமூக அமைப்புக்களும்,முஸ்லிம் நிறுவனங்களும்.பொது மக்களும்,கட்சியின் போராளிகளும் நம்புகின்றனர்.