கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.
நாடுதழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும் இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம். வெவ்வேறான அதிகாரப்போட்டிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சில் வெள்ளிக்கிழமை (21) முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாட்டில் பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இந்த நாட்டின் நீதியை நிலைநாட்டுகின்ற உயர் சபையான நீதிமன்றமானது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற போராட்டத்தில் இவ்வாறான ஒரு விதியினை ஏற்படுத்துவதற்கு மிகவும் நேர்மையாக நடந்து கொண்டமையினால் அதன் மூலம் பிரதிபலனே இன்று இங்கு இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால், இந்த அமைச்சுப்பொறுப்பு என்பது தற்காலிகமானது என்பதனை எல்லோரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இதனைவிடவும், இந்த அமைச்சானது பொதுத்தேர்தலின் பின்னர் கிடைக்கப்பெற்ற அமைச்சல்ல என்பதனையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். முன்னர் வகித்த அதே அமைச்சுப்பொறுப்புகளோடு புதிதாக உயர்கல்வி அமைச்சையும் பிரதமர் என்தலைமீது சுமத்தியுள்ளார். அதனை ஜனாதிபதியும் அங்கீகரித்துள்ளார்.அவ்வாறே அடுத்த வருடத்தில் எங்களுக்கு சில தேர்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் முதலில் எந்த தேர்தலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பது பற்றி இன்னும் தெளிவான முடிவு இல்லை. ஆனால் இந்த கேள்விகளுக்கான பதிலை தரக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இந்த அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் தங்களது தனியான சுயவிருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதனைவிடுத்து, இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து உரிய தேர்தலொன்றை நடத்துவது தான் பிரதான தேவையாக இருக்கின்றது.
இப்போது நாங்கள் எதிர்பார்க்கின்ற, இந்த விடயம் தொடர்பில் தமர அமில தேரரிடமும் நான் கலந்துரையாடினேன். அவ்வாறே ஜனாதிபதியுடனும் கதைத்துள்ளேன், ஜனவரி எட்டாம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லுவது ஜனாதிபதியினால் மட்டுமே முடியுமான விடயமாகும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்குவாராயின், இந்த விடயத்தில் மிகஇலகுவாக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.ஆனால், அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமானால் அதில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடவும் வேண்டும்.
நாடுதழுவிய தேர்தலொன்றுக்கு செல்லுவதாயின் பாராளுமன்ற தேர்தல் அல்லது இந்த ஜனாதிபதியின் கால எல்லை நிறைவு பெறுகின்ற போது தேர்தலொன்றை எதிர்பார்க்க முடியும். நாடுதழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும் இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம். வெவ்வேறான அதிகாரப்போட்டிகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.
இது தொடர்பில் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது ஜனநாயகத்திற்கான இந்தப்போராட்டத்தில் .எங்களோடு இருந்து, அனுபவம் வாய்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக புத்திஜீவிகளோடு இந்த விடயம் தொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவேண்டியுள்ளது. எனவேதான் இன்றைய தினத்தில் இந்த கடமைகளை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வுக்கு அறிவுப்பின்புலத்திலுள்ள புத்தி ஜீவிகள் சிலரையும் நான் அழைத்துள்ளேன்.
இந்த அமைச்சானது இந்த நாட்டின் அடுத்த பரம்பரையினர் தமது எதிர்காலத்தை சரிவர வடிவமைத்துக்கொள்ள வழிவகுப்பதாகும். உயர்கல்வி அமைச்சை பொறுத்தவரை, அது தலையிடி தரக்கூடிய அமைச்சு என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதுபற்றி நான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி.சில்வா அவர்களிடம் கேட்டபோது பிரச்சினைகள் ஏதுமில்லை நீங்கள் அதனை பொறுப்பெடுங்கள் என்றார். ஆனால் நான் அறிந்தவரையில் வாரத்தில் இரண்டுமூன்று தினங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெறுகிறது.
இளைய தலைமுறையினரின் பிரச்சினைகளையும், போராட்டங்களையும் நாம் சரிவர புரிந்து கொண்டு அவற்றுக்குரிய தீர்வுகளை காண முற்படவேண்டும். ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவேற்றம் செய்யும் ஜனநாயகம் தொடர்பான பலகருத்துக்கள் நடுநிலை தன்மை வாய்ந்தனவும், துணிகரமானவையும் ஆகும். அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய முறையில் எங்களது உயர்கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
எங்களது பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் அவர்களது வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டடிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு அப்பால், உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பிரச்சினைகள் நியாயமான முறையில் அணுகப்படவேண்டும். கடந்த சிலவாரங்களாக மூன்று முக்கிய அரசியல் தலைமைகளை மையப்படுத்தி நாட்டில் உருவாகியிருந்த குழப்பநிலை இனியும் தொடர இடமளிக்க முடியாது,
இந்த போராட்டம் தனிநபர்களினால் நடத்தப்பட்ட போராட்டமல்ல 50 நாட்களுக்கு மேல் முழுநாடும். முன்னின்று நடத்திய போராட்டமாகும். அதில் மூத்த அரசியல்வாதி ஏ.எச்.எம்.பௌசி முக்கியமானவர். அவர் எந்தத்தரப்பில் இருந்தபோதும் இந்த பிரச்சினை ஆரம்பித்த நாளிலிருந்து அவர் எடுத்தமுடிவுகள் தீர்க்கமானவை. கடந்த நாட்களில் நாள்தோறும் நாம் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். அதன்மூலம் எனக்கு கிடைத்த ஆறுதல் அளப்பரியது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, அலி ஸாஹிர் மௌலானா, பைசல் காசிம்,எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம் .மன்சூர், அமர தமில தேரர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்.டி.சில்வா அமைச்சின் செயலாளர்களான பத்மசிறீ ஜயமான, வசந்த ஹப்பு ஆராச்சி, பேராசிரியர் சந்திர குப்த தேனுவர ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.