அரசாங்கத் திட்டங்கள் எமது நாட்டிலேவெற்றியடையாமைக்கான காரணம் பொது மக்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதாகும் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவித்தார்.
எஸ்.அஷ்ரப்கான்-பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட வளாகத்தில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் அதிதியாக கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது,
கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் இன்று பொடு போக்குத்தனமான செயற்பாடுகள், ஒத்துழையாமை இருக்கின்றது. இதனால் பல்வேறு பின் விளைவுகளை எமது மக்கள் கண்டுகொண்டு இருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் டெங்கு நோயும் மரணங்களுமாகும்.
ஒரு சிரமதானம் மற்றும் ஏதாவது ஒரு பொது வேலைகள் என்றால் பொதுமக்கள் காட்டுகிற அக்கறை மிகவும் மன வேதனையளிக்கிறது.
ஜப்பான் போன்ற நாடுகளில் இயற்கை அழிவுகள் ஏற்பட்டால் ஒரு சிரமதானம் செய்ய வேண்டுமென்றால் அரசாங்கம் வருவதுமில்லை அரசு அதிகாரிகள் வருவதும் இல்லை மக்களே அதனை முன்னின்று செய்து விடயங்களை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இன்னும் அந்த மனோநிலை எமது நாட்டு மக்களுக்கு வரவில்லை.
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை துப்பரவு செய்யும் பணிகளில் மாநகரசபை அல்லது பிரதேச சபை அல்லது பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் செய்வார்கள் என்று ஜப்பான் நாட்டு மக்கள் நினைக்க மாட்டார்கள். அங்கு பாதையின் ஓரத்தில் ஒரு மரத்தை ஒருவர் நட்டு விட்டுச் சென்றால் இன்னும் ஒருவர் வந்து அதற்கு எதிர்காலத்திலே முறிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு கம்பை வைத்து நிலைபெறச் செய்வார். இன்னுமொருவர் நீரூற்றுவார். அந்த மரம் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பிரயோசனம் அளிக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாகும். இதனூடாக ஜப்பான் நாடு மிகவும் முன்னேற்றகரமான வகையில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.இவ்வாறு எல்லா விடயங்களும் அங்கு மக்கள் பங்களிப்புடனேயே செய்துமுடிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருக்கின்ற சிறிய சிறிய சிரமதான வேலையைக் கூட மக்கள் முன்வந்து செய்ய முடியாமல் இருக்கின்றது. அரசாங்கம் தான் எல்லாவற்றையும் தரவேண்டும் என்று மிகவும் பொடுபோக்காக எமது மக்கள் இருப்பது கவலையளிக்கிறது.இந்த மக்களுக்காக என்ன விடயத்தை தான் அரசாங்கம் செய்தாலும் இந்த மக்கள் திருப்தி காணும் நிலையில் இல்லை. அவர்கள் எனக்கு ஒன்றும் தரவில்லை என்று மிகவும் கவலையாகவே தெரிவிப்பார்கள்.ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு எல்லா அரசாங்க உதவிகளும் வழங்கப்பட்டிருக்கும். இவ்வாறான நிலையில் பொய் கூறி மீண்டும் போதாது என்ற மனநிலையுடன் தான் இந்த மக்கள் இருப்பார்கள். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயமாக அரசு அதிகாரிகளுக்கு இருக்கும்.
நமக்கு அரசாங்கம் என்ன செய்தது என்பதை விட நாம் என்ன இந்த அரசாங்கத்துக்கு பொது வேலைகளை செய்து கொடுத்தோம் என்று சொல்கின்ற மக்கள் இன்னும் எமது நாட்டில் உருவாகவில்லை.
நாட்டிலே நீர்வளம் இருக்கின்றது நிலவளம் இருக்கின்றது எல்லா வளங்களும் சிறப்பாக இருக்கின்றது ஆனால் மக்கள் மனங்களில் தான் மாற்றமில்லை. இதனால் நாடு முன்னேற்றம் காணாமல் இருக்கின்றது.
ஆகவே மக்கள் இங்கே விழிப்படைந்து எமது நிலைமைகளை நாங்களே சிறப்பாக முன்கொண்டு செல்ல வேண்டும். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு மாத்திரம்தான் அரச கடமைகள் சிறப்பாக வழங்கப்படும். மற்றவர்களுக்கு நாங்கள் எந்த அரச கடமைகளையும் செய்வதற்கு முன்னுரிமை வழங்க மாட்டோம். நாங்கள் நினைத்தால் அவர்களை இனங்கண்டு அவர்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க எங்களால் முடியும். ஆகக்குறைந்தது இந்த பொதுமக்கள் ஒரு நற்சான்றிதழ் சேவை என்று கூட எங்களிடம் கேட்டு வருவார்கள். இந்த இடத்திலே அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காத அவர்கள் அரசாங்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத பொதுமக்கள் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவர்களை கணக்கெடுப்போம்.
டெங்கு மூலம் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உயிரிழப்புக்கு பொறுப்பானவர்கள் அந்த டெங்கு நுளம்பு உருவாக காரணமாக இருந்தவர்கள் தான். இவர்கள் இறந்த பிறகும் அதற்கான பதிலை சொல்லியாக வேண்டும்.
எமது சுற்றுப்புறச் சூழலை வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தமாக வைத்துக்கொள்வது டெங்கு மற்றும் மலேரியா போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளிலிருந்து சுற்றுச்சூழலையும் எம்மையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கு அரசு அதிகாரிகள் என்று மட்டும் இருக்காமல் பொதுமக்களும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். டெங்கு பரவும் இடமாக எங்காவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்தின் குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 50,000 ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது. அரசாங்க உத்தியோகஸ்தர் என்றாலும் அவருக்கு அதே தண்டனை தான்.
எனவேதான் நுளம்பு பெருகும் எங்களுடைய வீட்டுச் சூழலையும் பிறருடைய வீட்டுச் சூழலையும் நாங்கள் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அரசாங்கத்தினுடைய திட்டங்களுக்கு மக்களுடைய பங்களிப்பு இல்லாமல் இருப்பதனால் இந்த நாடு வெளிநாடுகளில் கையேந்தி நிற்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டினுடைய ஒவ்வொரு மக்களும் வெளிநாடுகளுக்கு கடன் செலுத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். ஒரு தலைக்கு நாலு லட்சம் ரூபாய் கடன் செலுத்த வேண்டிய கட்டத்தில் இலங்கை திரு நாட்டில் ஒவ்வொரு பிரஜையும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
தற்போது வெள்ளத்தினால் கிளிநொச்சி,மன்னார்,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற போன்ற பிரதேசங்களில் 70 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அனர்த்தங்களுக்கு காரணம் நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்கள், அரச காணிகளில் இவர்கள் வசிப்பதுதான். அதுபோன்று சேரிப்புறங்களில் இவர்கள் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்வதும் பாதிப்புக்கு காரணமாகும்.
எனவேதான் சிரமதானங்கள் மற்றும் இதர நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் சிரமதானம் மற்றும் இதர வேலைத்திட்டங்களுக்காக மக்களிடம் அரசு அதிகாரிகள் முன் வருகின்ற போது அவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.