ஊழல் மோசடிகள் அற்றதாகவும், எந்தவித அரசியல் கலப்படங்கள் உட்புகாதவாறும் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,
விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என எதுவுமில்லை. எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் கட்சி மத பேதங்களின்றி உரித்துடையதே விளையாட்டு. இந்த விளையாட்டை இலங்கையில் முன்னிலைப்படுத்துவதே எனது பிரதான இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை அடைந்துகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.
இன்று எல்லோரும் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. விளையாட்டுத்துறையில் எத்தனையோ அம்சங்கள் இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
விளையாட்டில் அரசியலை நுளைக்காமல் இருப்பதே எனது முதற்கட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான விடயங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டிருக்க வேண்டும். விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதும், அதனை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதுமே எனது நோக்கமாகும்.
நான் இன்று விளையாட்டுத்துறை அமைச்சைப் பொறுப்பேற்பது, மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காகும். இதன்மூலம், எல்லோரும் நன்மை அடையவேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்களும், வலது குறைந்த படை வீரர்களும் இதனால் பெரும் நன்மை அடையவேண்டும். பாடசாலை மாணவர்கள், அவர்களின் சீருடையுடன் வருகை தரும் பட்சத்தில், அவர்களுக்கு சகல விளையாட்டுக்களையும் இலவசமாகவும், கெளரவமாகவும் பார்வையிடுவதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.
இன்று விளையாட்டுத்துறைக்கு ஒரு அலைவரிசை இல்லாமல் உள்ளது. இவ்வாறான அலைவரிசை ஒன்றை, மிக விரைவில் பெற்றுக் கொள்ளும் கடப்பாடுத் தேவையுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். எனவே, இது தொடர்பிலும் ஆராய்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். டிஜிட்டல் சம்பந்தமான துறையும், எனது அமைச்சுடன் இணைந்திருப்பதால், இதனை மேற்கொள்வதற்கு எனக்கு மிக எளிதாக முடியும்.
இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நாம், இந்த ஆண்டை விளையாட்டுத் துறையை சுத்தமாக்கும் ஆண்டாகக் கருதுவோம். அத்துடன், அடுத்த புதிய ஆண்டிலிருந்து விளையாட்டுத்துறையையும் புதிய உத்வேகத்துடன் புதிய பல அம்சங்களுடன் நடைமுறைப்படுத்துவோம்.
கடந்துபோன 51 நாள் போராட்டத்தின் பின்பு, மீண்டும் நாம் மீட்சிபெற்று, புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, அதனை ஒரு பாடமாகக் கற்றுக்கொண்டு, புதுப்பொழிவுடன், புதிய உற்வேகத்துடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தற்போது நாம் அரும் பாடுபட்டு, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். விளையாட்டுத்துறை சார்ந்த முன்னேற்பாடுகளும், குறித்த இத்திட்டத்தின் கீழ் அடங்கும் என்றார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஷ், ஹர்ஷன ராஜகருண உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.