ஐ ம சு கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெற்றதையடுத்து ஒரு மாதமுடிவில் சரத்து 99(13) இன் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தாமாக இழந்துவிடுவார்?
எனவே, தற்போது ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் அவரை கௌரவ என்று அழைப்பதா? அல்லது திரு என அழைப்பதா? என கேள்வியெழுப்பிய பா உ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தேர்தல் ஆணையாளரை UPFA யாப்புடன் வரவழைத்து இது தொடர்பாக ஆராயவேண்டும்; என இன்று ( 18/12/18) பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்றதொரு கருத்தை பா உ, திரு சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.
கட்சிமாறுவதால் 99(13) இன் கீழ் பதவியிழத்தல் எவ்வாறு நிகழலாம்; என முன்னைய ஆக்கத்தில் பார்த்தோம். இப்பொழுது இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் மேலும் ஆராய்வோம்.
99(13) (a) இன் பிரகாரம் ஒருவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பதற்கு:
முதலாவது தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட “கட்சியின் அங்கத்துவத்தை இழக்க வேண்டும்”. அவ்வாறு இழந்து ஒரு மாதமுடிவில் அவரது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகும்.
இங்கு எழுகின்ற பிரதான கேள்வி ‘ ஒரு கட்சியின் அங்கத்துவத்தை 99(13) இன் பிரகாரம் ஒருவர் எவ்வாறு இழப்பார்?
(1) Resignation ராஜினாமா
(2) Expulsion ( கட்சியிலிருந்து) விலக்குதல்
(3) otherwise வேறு வகையில்
மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவில்லை. எனவே, முதலாவது தலைப்பின் கீழ் பதவியிழக்க மாட்டார்.
அவர் அவரது கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. எனவே, இரண்டாவது வகையாலும் பதவியிழக்க மாட்டார்.
அவ்வாறாயின் இது மூன்றாவது வகையின் கீழ்தான் வரவேண்டும். அதாவது “ வேறுவகையில்” ( otherwise)
இந்த வேறுவகை என்பது எதைக்குறிக்கின்றது; என்பது வியாக்கியானத்தோடு சம்பந்தப்பட்டது. அரசியலமைப்புக்கு உத்தியோகபூர்வ வியாக்கியானத்தைத் தருகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு. அவ்வாறு உயர்நீதிமன்றம் தீர்மானிக்காதவரை யாரும் பொருத்தமான வியாக்கியானத்தைச் செய்யலாம்.
பா உ ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பேசும்போது, “விலக்கினால் மாத்திரம்தான் உயர்நீதிமன்றம் செல்லலாம்” என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கூற்று பகுதியாக சரியானதாகும். முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.
ஏனெனில் கட்சி விலக்குகின்றபோது மாத்திரம்தான் அவ்விலக்கலுக்கு எதிராக அதாவது கட்சிக்கெதிராக ஒரு மாதத்திற்குள் 99(13) இன் கீழ் உயர்நீதிமன்றம் செல்லலாம். அவ்வாறு சென்றால் தீர்ப்பு வரும்வரை அவரது பதவி பறிபோகாது. ஆனால் பா உ ஹக்கீம் கூறுவதுபோன்று otherwise என்ற சொல்லுக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அந்த வெற்றிடத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம்தான் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 64 இன் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவித்தால் அவர்களுக்கெதிராக நீதிமன்றம்
செல்வதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. அவ்வாறு செல்லமுடியாதென்றால் சகல கட்சிகளும் விலக்குதல் என்ற ஒன்றைச் செய்யாமல் otherwise என்ற சொல்லுக்குட்பட்டு அங்கத்துவத்தை இழந்தார்; என்று அறிவித்து இலகுவாக வேண்டாத பா உ க்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.
அவர் தொடர்ந்து கூறும்போது ஒருவர் கட்சிமாறுகின்றபோது “தாமாகவே பதவியிழந்தவராக கருதப்படுவார்” என்று கூறுகின்றார். இந்த வியாக்கினம் பிழையானது. ஏனெனில் கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்; என்பது 99(13) படி சரியாகும்.
இன்னொரு கட்சியில் இணைந்தால் தனது கட்சி அங்கத்துவத்தை இழப்பாரா? இல்லையா? என்று 99(13) கூறுகின்றதா? எதைவைத்து அந்த முடிவுக்கு வருவது. ஹக்கீம் அவர்கள் அதற்கும்மேல் ஒரு படிசென்று ipso facto பாராளுமன்ற அங்கத்துவத்தையே இழந்துவிடுவார்; என்பது என்ன அடிப்படையில் .
அது அவர்களுடைய கட்சி யாப்பையும் தீர்மானத்தையும் பொறுத்தது. இவர் கட்சியின் அங்கத்துவத்தை இழந்துவிட்டார்; என்று அவரது கட்சி அறிவித்தால் அங்கிருந்துதான் 99(13) செயற்பட ஆரம்பிக்கும். எவ்வாறு கட்சி அங்கத்துவத்தை இழப்பது என்பது அவர்களது கட்சிக்குரிய விடயம்.
தெரிவுக்குழு அமைத்தல்
———————————
நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மக்களால் நீதித்துறையினூடாக செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தின், அல்லது அதன் அங்கத்தவர்களின் சிறப்புரிமை, அதிகாரம், immunity என்பன தொடர்பான நீதித்துறை அதிகாரத்தை நீதிமன்றம் செயற்படுத்த முடியாது. அதை சட்டத்திற்குட்பட்டு பாராளுமன்றமே செயற்படுத்த வேண்டும்; என்று சரத்து 4(c) கூறுகின்றது.
இதனைக் குறிப்பிட்டு மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினரா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழு ஒன்றை நியமித்து UPFA இன் யாப்பை ஆராயவேண்டும்; எனக் கூறுகின்றார்.
பாராளுமன்றத்திற்கு வேண்டிய தெரிவுக்குழுவை நியமிக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. ஆனால் தெரிவுக்குழு ஒரு கட்சியின் வேலையைச் செய்யமுடியுமா?
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி மாறுவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தோடு, சிறப்புரிமையோடு, immunity யோடு சம்பந்தப்பட்ட விடயமா? அவர் 99(13) இன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தால், பா உ இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பது சிறப்புரிமை மீறலில்லையா? என்ற கேள்வி எழலாம். அது அவரது பேச்சிலும் தொனித்தது, நிலையியல் கட்டளை 21 ஐ சுட்டிக்காட்டியபோது.
நியாயம். ஆனால் இங்கு கேள்வி மஹிந்த பா உ வா? வெளி ஆளா? என்பதல்ல. அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டது, எல்லோருக்கும் தெரியும். கேள்வி, அவர் தற்போது தனது பா உறுப்புரிமையை இழந்திருக்கின்றாரா? இல்லையா? என்பதுதான். அதைத் தீர்மானிப்பதற்கு எந்த சட்டத்தின்கீழ் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது?
UPFA ஒரு Alliance. பொதுவாக alliance களில் உள்ள கட்சிகள்தான் அங்கத்தவர்கள். அங்கத்துவக் கட்சிகள் தமது அங்கத்தவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது அது alliance ஐக் கட்டுப்படுத்துகின்ற சரத்துக்கள் அதன் யாப்பில் இருக்கும். மஹிந்த விடயத்தில் அவ்வாறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் நடக்கவில்லை. அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு எடுகோளுக்கு. ஶ்ரீ ல சு க, UPFA இன் ஓர் அங்கத்துவக் கட்சி. அதன்யாப்பின் பிரகாரம் கட்சிமாறுபவர்கள் அங்கத்துவத்தை இழப்பார்கள் என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அதை ஶ்ரீ சு கட்சி UPFA இற்கு அறிவித்து UPFA பா செ நாயகத்திற்கு அறிவித்து மஹிந்த பதவியிழக்கலாம். அதுவேறுவிடயம்.
அவர்கள் நடவடிக்கை எடுக்காதபோது தெரிவுக்குழு அதனைச் செய்து பா செ நாயகத்திற்கு அறிவிக்குமா?
எனவே, இவர்களது நிலைப்பாட்டிலுள்ள முதலாவது தவறு: “ otherwise “ ‘ வேறுவகை’ என்றுசொல்லுக்கு இவர்களாக, இன்னுமொரு கட்சிக்கு மாறினால் என்று பொருள் கொடுத்ததாகும்.
இரண்டாவது, ஒருவர் இன்னுமொரு கட்சிக்கு மாறினால் அவர் தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் அங்கத்துவத்தை இழப்பாரா? இல்லையா? என்பது அந்தக் கட்சிக்குரிய விடயம்.
ஒரு கட்சியின் வேலையை ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழு செய்யமுடியாது.
சுருங்கக்கூறின், ஆடை கழுவும்போது “ சவர்காரம் விடும் இடத்தில் இருந்து ‘ நீலம்’ தன் வேலையை ஆரம்பிக்கும்” என்று ‘ நீல’ விளம்பரத்தில் கூறுவார்கள். அதுபோல் ஒரு கட்சி “ இவர் எமது கட்சி அங்கத்துவத்தை இழந்துவிட்டார்” என்று அறிவித்தால் அந்தக் கணத்தில் இருந்துதான் 99(13) ஒரு பா உ விடயத்தில் செயற்பட ஆரம்பிக்கும்.
அந்தக் கட்சி அவ்வாறான அறிவிப்பைச் செய்வதற்கான அடிப்படைக்காரணிகள்தான், ராஜினாமா, விலக்குதல், வேறுவகை என்பனவாகும். ஒரு கட்சியின் அங்கத்துவம் என்பது அந்தக்கட்சிக்கு மட்டும் உரிய விடயம். அதில் வெளியார் தலையிடமுடியாது.