தனி மனிதனின் கைகளில் முழு அதிகாரங்களும் இருக்குமிடத்து அங்கு சர்வதிகாரம் தோன்றுகிறது. இந்த சர்வதிகாரத்திற்கு எதிரானதாக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகம் சர்வதிகாரத்திற்கெதிராக பல ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்த வரலாறுகளைக் கண்டுள்ளது. இலங்கை நாட்டைப் பொறுத்தளவில் அடிக்கடி சர்வதிகாரம் தலைதூக்க எத்தனித்த போது, அதனைத்தடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளதை நாம் வரலாறுகளினூடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் சர்வதிகாரம் தலைதூக்கும் நிலை தோன்றவே மக்கள் 2015ம் ஆண்டு ஜனநாயகத்தைப் பாதுகாத்து, நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் சிறுபான்மை கட்சிகளும் இணைந்து கொண்டு வந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை வெல்ல வைப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கியிருந்தார்கள்.
இவ்வாறு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியலமைப்பின் 19வது திருத்தம் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தின் அனுகூலங்களை மக்கள் தெளிவாக இன்று புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
சிறுபான்மைக் கட்சிகளில் குறிப்பாக முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஆட்சியில் 18வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே தான் அதற்கு பிராயச்சித்தமாக 19வது திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் அதிக கரிசனையுடன் செயற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதற்குள்ளும் முரண்பாடுகள் தோற்றம் பெற்று இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கத்தக்கதாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவசரமாக புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது ஜனநாயக விரோதமான, அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகப் பார்க்கப்பட்டு, இதற்கெதிராக அரசியலமைப்பை பாதுகாப்பதனூடாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டம் தொடங்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமித்தனூடாக இப்போராட்டம் 50வது நாளிலே வெற்றி பெற்றிருந்தது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத மஹிந்த ராஜபக்ஸவை நியமித்து விட்டு, பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் தொடரிலே பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வதில் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் பல வரப்பிரசாதங்களுடன் களத்தில் இறங்கியும் தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது போனது.
இவ்வாறு மஹிந்த ராஜபக்ஸவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தால், தொடர்ந்தும் பெரும்பான்மையுள்ள பிரதமராக ஆட்சியைத் தொடர்ந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதற்காக கட்சித்தலைவர்களுடன் பேரம் பேசியும் அதற்கு உடன்படவில்லையென்பதால், இவ்விரு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தெடுத்து தங்களுடன் இணைத்துக் கொள்ளும் கைங்கரியமும் மேற்கொள்ளப்பட்டது.
நாடு, தேசிய நலன் என்ற அடிப்படையில் நாட்டின் உயிர்த்துடிப்பாக அரசியலமைப்பு காணப்படுகிறது. அதனைப் போற்றிப் பாதுகாப்பது, அதற்கு மதிப்களிப்பது ஒவ்வொரு பிரஜைகளின் கடமை என்ற அடிப்படையிலும், அதனைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரண் என்பதை உறுதிப்படுத்தி, அரசியலமைப்பையும் அதனூடாக ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் தங்களை அழித்து அரசியல் செய்ய முற்படும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரையும் இந்தச்சந்தர்ப்பத்தில் அரவணைத்துக் கொண்டு இந்த ஜனநாயக போராட்டத்தில் களமிறங்கினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்றால் மிகையாகாது.
கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் றவூப் ஹக்கீம் மீது முன்வைத்தாலும், இந்தச்சந்தர்ப்பத்தில் பதவிகளுக்காக மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்கள் பதவிகளுக்காக அல்ல நாட்டின் நன்மைக்காகச் செயற்படக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வதாக இவரின் செயற்பாடுகள் காணப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு அது பயனளிக்காது போகவே பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீறும் செயல் என கண்டித்து, நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடி நீதியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது மாத்திரமின்றி, மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை இவ்வாறான தீர்ப்புகளினூடாக எடுத்துக்காட்டுவதாக நீதிமன்றச் செயற்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பொறுத்தளவில் பல தடவைகள் நீதிமன்றம் சென்றதை நாம் மறப்பதற்கில்லை. அந்த வரிசையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் நீதிமன்றம் சென்றார். இதையும் பலர் விமர்சனம் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு கடந்த காலங்களில் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட நீதி நடவடிக்கைகள் தொடர்பில் போதிய அறிவில்லை என்பதைக் காட்டுகிறது.
பதவிகள் தங்களுக்கு பொருட்டல்ல என்பதை கடந்த காலங்களில் பல தடவைகள் அமைச்சுப் பதவியை இராஜனாமாச் செய்ததனூடாக ரவூப் ஹக்கீம் நிருபித்திருந்தார்கள். அந்த அடிப்படையிலே, அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் கடந்த 50வது நாட்களையும் தாண்டி இரண்டு பொலிஸ் பாதுகாப்புடன் களத்தில் நின்று பாதுகாப்பற்ற நிலையில் போராடியதை இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் மறப்பதற்கில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இப்போராட்டம் ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபரை பிரதமராக மீண்டும் கொண்டு வருவதற்கான போராட்டமாக கருதவில்லை. மாறாக, இது ஜனநாயகப்போராட்டம். அரசியலமைப்பைப் பாதுகாக்கத் தவறினால் எதிர்காலத்தில் சிறுபான்மைச் சமூகத்திற்கு அரசியலமைப்புகளினூடாக வழங்கப்பட்ட உரிமைகளை அனுபவிப்பதற்கு தடைகள் மாத்திரமின்றி, சர்வதிகார போக்கிற்கு ஆட்சியாளர்கள் செல்லுமளவிற்கு வாயுப்புகள் கிடைத்து விடுமென்பதாலும் நாட்டின் எதிர்காலம் கருதியுமே இந்தப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
"மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்" என்ற கூற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.